கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்றுப் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமாக விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் கடந்த திங்கட்கிழமை(05) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக இளவாலைப் பொலிஸாருக்கு இரகசியத் தகவலொன்று வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்துக் குறித்த வீடு இளவாலைப் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுச் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 49 போத்தல் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்துப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரம் நேற்றுத் திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.இதன் போது ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட முன்குற்றமொன்றிருப்பது தொடர்பாக மல்லாகம் நீதவானின் கவனத்திற்குப் பொலிஸார் கொண்டு சென்றனர். குறித்த வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
Related posts:
|
|