எங்களின் வாழ்வியல் அம்சங்களில் குடித்தொகைப் பரம்பல் என்பது குறைந்து வருகிறது: புவியியல் துறை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

பத்து வருடத்திற்கு ஒரு தடவை குடித் தொகை பற்றிய கணக்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட குடியியல் கணக்கெடுப்பின் படி சிங்கள மக்கள் 76 வீதமானவர்களாகவும் , தமிழர்கள் 11.2 வீதமானவர்களாகவும் , முஸ்லீம்கள் 9.2 வீதமானவர்களாகவும், இந்தியத் தமிழர்கள் 4.6 வீதமானவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த வகையில் மொத்தமாக 24 வீதமானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும், 76 வீதமானவர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். கடந்த 20 வருடங்களிற்கு முன்னர் 65 வீதமானவர்கள் சிங்களவர்களாகவும், 35 வீதமானவர்கள் தமிழர்களாகவும் காணப்பட்டார்கள்.
எங்களின் வாழ்வியல் அம்சங்களில் குடித்தொகைப் பரம்பல் என்பது குறைந்து வருகிறது. குடித் தொகை மாத்திரமல்லாமல் எங்களின் நிலப் பரப்பின் அளவும் குறைவடைந்து வருகிறது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் முற்றாக இல்லாமல் போயுள்ளது. திருகோணமலையின் சம்பூரில் நில அபகரிப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கிலும் இவ்வாறான நில அபகரிப்புக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. நான் இன வாதம் பேசுகிறேன் என நீங்கள் நினைத்து விடக் கூடாது. நான் புவியியல் ரீதியாக யதார்த்தத்தையே பேசுகிறேன் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ். பல்கலைக் கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.
அண்மையில் காலமான ஈழத்தின் புகழ் பூத்த மூத்த எழுத்தாளர் அமரர் -கலாநிதி க. குணராசா (செங்கைஆழியான் ) அவர்களின் கலை,இலக்கிய, சமூகப் பணிகளை நினைவு கூரும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (02) பிற்பகல் – 3.30 மணி முதல் கலட்டி எச்சாட்டி மகாமாரியம்மன் மணிமண்டபத்தில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இவ்வாறான இடைவெளியில் நாங்கள் தமிழர் வாழ்வியலை எவ்வாறு தொடர்ந்தும் கொண்டு செல்லப் போகிறோம்? வாழ்வியல் என்றால் என்ன ? பொருளாதார நிலைமை, விவசாயம், கைத்தொழில்கள், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள், மனித வாழ்வுக்கு உகந்த ஒழுக்கங்கள், கலை கலாசார விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதையே தமிழர் வாழ்வியல் என்கிறோம். அந்த வகையில் தமிழர் வாழ்வியலை மேம்படுத்துவதற்கு நாங்கள் பல முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டிய காலகட்டத்திலுள்ளோம்.
யாழ்ப்பாணம் கலட்டிப் பிரதேசம் தான் செங்கையாழியானின் பிறந்த மண். சிறு வயதில் ஓடித் திரிந்து விளையாடிய இடம். அந்தப் பிரதேசத்து மக்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவது என்பது ஒரு வரலாற்றுப் பதிவான நிகழ்வாகும். “தோன்றிப் புகழோடு தோன்றுக” என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு இலக்கணமாக செங்கை ஆழியான் வாழ்ந்து காட்டியிருக்கிறார். செங்கை ஆழியான் எனக்கு மூன்று வயது மூத்தவராகக் காணப்பட்ட போதும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியிருந்தது.
எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க. வரதராஜசிங்கம் ஆகியோர் யாழ். பல்கலைக் கழகத்தில் புவியியற் துறையில் பயின்ற காரணத்தால் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். யாழ். இலக்கிய வட்டம் என்ற அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னதாக நாங்கள் க.பொ .த உயர்தரத்தில் கற்கும் போது யாழ்.இளம் எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி ஆர்வத்துடன் செயற்பட்டோம்.
யாழ்.எழுத்தாளர் சங்கத்தை நிறுவனமயப்படுத்தியவர் செங்கை ஆழியான். நான் தமிழ் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் செங்கையாழியான் போன்றவர்கள் மீது கொண்டிருந்த பிடிப்பு புவியியல் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமானது.
தமிழர் வாழ்வியல் பற்றி குணராசா மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். இலக்கியப் பணிகளில் மாத்திரமல்லாமல் நிர்வாகப் பணிகளிலும் திறமையாகச் செயற்பட்டார். வாழ்வியல் எண்ணங்களைத் தனது எழுத்துக்களுடாகவும், கருத்துக்களுடாகவும் விதைத்தார். காட்டாறு, வாடைக் காற்று போன்ற நாவல்களிலும், வரலாற்று ரீதியான நூல்களிலும் தமிழர் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாவலாசிரியராக விளங்கிய அவர் வேறு எவரும் சாதிக்காத வகையில் ஏறத்தாழ 48 நாவல் நூல்களையும், எட்டுச் சிறுகதைத் தொகுதி நூல்களையும், கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். அது மாத்திரமன்றி வரலாற்று ரீதியான பல விடயங்களை அனைவருக்கும் விளங்கத் தக்க வகையில் எழுதி வெளியிட்டுள்ளமையும் அவரது தனித்துவமாகும். கடல் கோட்டை வரலாறு, குபேனியின் வரலாறு, யாழ்ப்பாண மன்னர் பரம்பரை பற்றிய வரலாறு என்பன குறிப்பிடத்தக்கவை எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|