உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Wednesday, April 26th, 2017

வினைத்திறனற்ற அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றியவர்கள் நாங்கள்தான் என உரிமை கொண்டாடுபவர்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் அதிக அக்கறை கொள்ள வேண்டுமென பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வடராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி சென்.செபஸ்ரியன் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி நேற்று (24.04.2017) பிற்பகல் 4.00 மணியளவில் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு தே.யூலியன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விளையாட்டு நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சென்.செபஸ்ரியன் விளையாட்டுக்கழகம் சுமார் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நடாத்தியிருக்கின்றார்கள். இது இவ்விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் விளையாட்டுத்துறையில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்பகுதியில் பல விளையாட்டுக்கழகங்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் மிகவும் திறமையான விளையாட்டுச் செயற்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 07 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அடிப்படை வசதிகள் விளையாட்டுக் கழகங்களுக்கு முழுமையாக செய்யப்படவில்லை. வெற்றிலைக்கேணி சென்.செபஸ்தியன், ரம்போ கட்டைக்காடு சென்.மேரிஸ் மற்றும் கேவில் வெள்ளிநிலா ஆகிய விளையாட்டுக் கழகங்களுக்கு மைதானங்கள்; கூட புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன. புலம்பெயர்ந்து வாழும் இக்கிராம உறவுகள் தத்தமது கிராம வளர்ச்சிக்கு உதவுகின்றனர். அவர்களுடைய உதவிகள் பேருதவிகளாக இருந்தாலும் அவர்கள் மென்மேலும் அக்கறை கொள்ள வேண்டும். நாம் உடுத்துறை செந்தமிழ், மருதங்கேணி கணேசானந்தா மற்றும் மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழக மைதானப் புனரமைப்புக்கு நிதிகள் வழங்கியுள்ளோம். மேலும் எமது முயற்சிக்கேற்ப சென்.செபஸ்ரியன் விளையாட்டு மைதானத்தின் விஸ்தரிப்பு மற்றும் சுற்று மதில் அமைப்பதற்கு விஷேட முயற்சிகள் ஊடாக உதவ நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியவர்கள் நாங்களே என உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அவர்கள்தான் கொழும்பின் செல்வாக்குள்ள செல்வந்தர்களாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற உதைபந்தாட்ட நிகழ்வுகளின் பின்னர் இறுதிப் போட்டியில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகமும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டதில் செந்தமிழ் விளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோல் கணக்கில் 2017ம் ஆண்டுக்கான சென்.செபஸ்ரியன் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தாளையடி பங்குத் தந்தை வண.பிதா ஜெயராசா எல்மோ அடிகளார். பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கௌரவ விருந்தினர்களாக அருட்சகோதரன் ரி.ஜெனிஸ்ரன் பெனடிற் (அ.ம.தி) வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர் வே.பிரசாந்தன் மற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts: