உடுவில் பிரதேசத்தில் டெங்குத் தொற்று தீவிரம்!

Tuesday, February 5th, 2019

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் டெங்குத் தொற்று அதிகரித்துள்ளதால் சிறப்பு டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் இணைந்து டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

குடாநாட்டில் தற்போது டெங்குத் தொற்று வீரியம் பெற்றுள்ள நிலையில் சனத்தொகையின் விகிதாசாரப் பரம்பலுடன் ஒப்பிடும்போது உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் டெங்குத் தொற்று மிக அதிகமாகவுள்ளது என்று தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அங்கு கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 143 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஏழாலை, குப்பிளான், இணுவில், சுன்னாகம், புன்னாலைக் கட்டுவன், ஈவினை, மத்தாலோடை ஆகிய இடங்களே அதிகம் டெங்குத் தொற்று இனங்காணப்பட்டுள்ள பகுதிகளாகும்.

டெங்குத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் புகையூட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று இனங்காணப்பட்ட பகுதிகள் அனைத்திலும் களத் தரிசிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுளம்பு பரவ ஏதுநிலை காணப்பட்ட 21 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுத் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் சமூகமளிக்காதவர்களுக்கு எதிராகப் பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Related posts: