நாளை இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்ப்பு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, May 8th, 2022

பிரதமர் பதவியலிருந்து தான் பதவி விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நாளை பிரதமர் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விசேட அமைச்சரவை கூட்டத்தில் தனது பதவிவிலகலின் பின்னர் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான உரிய திட்டம் காணப்பட்டால் தான் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தொலைபேசி அழைப்பு மூலம் அரச தலைவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவது உட்பட சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அதன்பிரகாரம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளின் படி நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் நாளை இடம்பெறும் எனவும்  பதவி விலகிய பின்னர் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசமைப்பின் படி பிரதமர் பதவி விலகுவது என்பது முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாகும், அவ்வறான சூழ்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்கவேண்டும் எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக யார் புதிய அமைச்சரவை யாரை பிரதிநிதித்துவம் செய்யும் என்பது முக்கிய கேள்வியாக காணப்படுகின்றது.

Related posts: