இலங்கை வங்கித் துறையில் 10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் – எதிர்பார்க்கப்படுவதாக பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் எச்சரிக்கை!

Sunday, October 1st, 2023

இலங்கையில் வங்கித் துறையில் மாத்திரம் ஏறத்தாள  10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை விட்டு பல நிபுணர்கள் வெளியேறிவிட்டதாகவும், அரசாங்கம் இவர்களது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் புலம்பெயர்தல் விகிதம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் இருந்து இன்னும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம் சொல்வதற்கு எதிர்மாறான விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும்.

ஏனென்றால் சர்வதேச நாணய நிதியத்தினுடைய உதவி வெறுமனே 2.9 பில்லியன் டொலர்கள் மாத்திரம்தான்.  அது பெரிய தொகை அல்ல.

ஆனால், இந்த புலமையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாம் வெளியேறினால் அதன் விளைவு இந்த 2.9 பில்லியனை விட எத்தனையோ மடங்கு இருக்கக் கூடும். அது பாரதூரமானது.

ஆகவேதான் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் அத்தனையையும் இலங்கை அரசாங்கம் கேட்க இயலாது.

அப்படி செய்தால் அது இலங்கை அரசாங்கத்தின் மீது பெரிய பிரச்சினையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.  பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: