இலங்கையில் 90 வீத பெண்கள் மீது துஷ்பிரயோகம் – ஆய்வில் தகவல்!

Friday, March 10th, 2017

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும், 90 சத வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சனத்தொகைக்கான நிதியம் (UNFPA) என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.  இந்த ஆய்வில் பங்கேற்ற 23 வயதான யுவதி ஒருவர் ஆண் பயணிகள் முறைகேடான வகையில் தொடுதல், சிறுமிகளின் மீது சாய்தல் போன்றவற்றை தான் அவதானித்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சில பஸ் நடத்துனர்கள் பயணச் சீட்டுக்களை வழங்கும் சந்தர்ப்பத்தில் சிறுமிகளை தகாதமுறையில் தொடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 இல் UNFPA அமைப்பானது இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் 15 – 35 க்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்தான 2,500 மாதிரியெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய ஆய்வை முன்னெடுத்துள்ளது. பங்காளர் கலந்துரையாடல், பிரதான தகவலாளர், நேர்காணல்கள் மற்றும் வினாக்கொத்து ஆய்வுகள் ஊடாக இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதன்போது, பெரும்பாலான பெண்கள் தாம் பொதுப் போக்குவரத்தின் போதே துஷ்பிரயோகங்களுக்கு இலக்காவதாக கூறியுள்ளார்.

இதேவேளை தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கைப் பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: