இலங்கையின் தொழில்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம் – ரில்வின் சில்வா
        
                    Tuesday, March 22nd, 2016
            “எட்கா” என்ற உடன்படிக்கையின் ஊடாக நாட்டில் தொழில் சந்தை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இந்திய நாட்டவரை இலங்கைக்கு வரவழைத்து தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அட்டன் நகரில் அஜந்தா மண்டபத்தில் நடைபெற்ற எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
நமது நாட்டின் அனைத்து தேவைகளையும் வெளிநாட்டவர் அனுபவித்து வருகின்றனர். வெளிநாட்டு தொழில்நுட்ப பொருட்களை நம் நாட்டவர் பணம் கொடுத்து வாங்கும் பொழுது அப்பணம் வெளிநாட்டுக்கு செல்கின்றது.
குறிப்பாக டோல் தனியார் நிறுவனம் வாழைப்பழம் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நம் நாட்டு வளங்களை பாவித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை பெருவாரியாக நிகழ்ந்து வருகின்றது. இதை தடுக்க வேண்டும்.
நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு ஐீவனும் வெளிநாட்டுக்கு 5 இலட்சம் ரூபா கடனாளியாக இருந்து வருகின்றனர்.
கடந்த 30 வருட காலத்தில் எந்தவொரு உள்நாட்டு தொழில்நுட்பமும் இயங்கவில்லை. சீபா என்ற உடன்படிக்கையை முன்னைய அரசாங்கம் கொண்டு வந்தது. அது மக்களின் போராட்டத்தால் தடைப்பட்டது.
புதிய அரசாங்கம் எட்காவை கொண்டு வர முயற்சிக்கின்றது. இதன் உள்ளக இரகசியங்கள் மக்களுக்கு இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இது குறித்து ஆராய்ந்து வருகின்றது. இது நமது நாட்டுக்கு ஏற்ற ஒரு உடனபடிக்கை அல்ல. இதனால் தான் இதை முற்றாக ம.வி.மு எதிர்க்கின்றது.
ஏனைய நாடுகளுக்கு இலங்கையின் வளங்கள் விற்கப்பட்டுள்ளது. இந்தியா அயல் நாடு இதற்கும் ஏதாவது கொடுக்க வேண்டும். என்ற எண்ணத்தில் தான் எட்கா ஊடாக இலங்கையை ஆக்கிரமிக்க இந்த அரசு இடம் வகுத்து வருகின்றது. ஆனால் இந்தியாவுக்கு நாம் எதிராளிகள் அல்ல.
ஆனால் அவர்களின் முன்னெடுப்புகள் இலங்கையின் பொருளாதரத்தை சுரண்டுவதாக காணப்படுவதால் இதன் எதிர்ப்பினை ம.வி.முன்ணணி மக்கள் மத்தியில் மாவட்டங்கள் தோறும் முன்னெடுத்து செல்கின்றது.
நாட்டை வெளிநாட்டவர்க்கு விற்பனை செய்யும் அரசாங்கங்களை மக்கள் தெரிவு செய்கின்றனர். நமது நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் வெளிநாடுகளுடன் செய்யப்படும் உடன்படிக்கைகள் பாதிக்கு பாதி இலாபம் வர கூடியதாக அமைய வேண்டும்.
Related posts:
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

