இன்று முதல் மொழிபெயர்ப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Thursday, September 1st, 2016

மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சு செய்வதற்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பதாக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் 2016 செப்டம்பர் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரியின் கையொப்பத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு முகவரியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள 12/2003 (III) இலக்க 2016.08.22 திகதிய மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சிடல் சம்பந்தமான கட்டண மீளாய்வு என்ற தலைப்பிலமைந்த சுற்றறிக்கையிலேயே மேற்படி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புச் செய்வதற்கு ஒரு சொல்லுக்கான கட்டணம் 2 ரூபாய்.அதற்கமைவாக, ஆவண வகுதியைப் பொருட்படுத்தாது, பொழிபெயர்க்கப்படுகின்ற சொற்களின் எண்ணிக்கைக்கு அமைய ஒரு சொல்லுக்கு 2.00 ரூபா வீதம் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.

மொழிபெயர்ப்பதற்கான ஆவணத்தில் அடங்கியுள்ள சொற்களின் எண்ணிக்கை அல்லது மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் அடங்கியுள்ள சொற்களின் எண்ணிக்கை ஆகிய ஏதேனுமொன்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத நிறுவனங்கள், பொழிபெயர்ப்பு தொடர்பான தொழிற்துறை தகைமைகளுடன் கூடிய ஆட்களைத் தெரிவு செய்து, வளவாளர்களுக்கான ஆவணமொன்று பேணப்படல் வேண்டும். அத்துடன் சேவையின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப மொழிபெயர்ப்புகள் அவர்களூடாக செய்துகொள்ளப்படல் வேண்டும்.

உரைபெயர்ப்புச் செய்வதற்கான கட்டணம்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களது சபைக் கூட்டங்களின் பேச்சுக்களை ஒருங்கிணைவாக / உடனடியாக உரைபெயர்ப்புச் செய்வதற்கு முதலாவது மணித்தியாலத்திற்கு ரூபா.700 உம், மேலதிக மணித்தியாலம் ஒவ்வொன்றிற்கும் ரூபா. 500 உம் செலுத்தப்படல் வேண்டும்.

விஞ்ஞான, தொழில்நுட்ப, கலை விரிவுரைகளை ஒருங்கிணைவாக / உடனடியாக உரைபெயர்ப்புச் செய்வதற்கு முதலாவது மணித்தியாலத்திற்கு ரூபா.750 உம், மேலதிக மணித்தியாலம் ஒவ்வொன்றிற்கும் ரூபா. 600 உம் செலுத்தப்படல் வேண்டும்.

பொதுக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட வகுதிக்குட்படாத ஏனைய விரிவுரைகளை ஒருங்கிணைவாக / உடனடியாக உரைபெயர்ப்புச் செய்வதற்கு முதலாவது மணித்தியாலத்திற்கு ரூபா.500 உம், மேலதிக மணித்தியாலம் ஒவ்வொன்றிற்கும் ரூபா. 350 உம் செலுத்தப்படல் வேண்டும்.

தட்டச்சுச் செய்வதற்கான கட்டணம்

360 சொற்கள் அல்லது அதற்கு அதிகமான சொற்களை தட்டச்சுச் செய்வதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ. 45 உம், 240 சொற்களிலிருந்து 359 சொற்கள் வரை தட்டச்சுச் செய்வதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ. 40 உம், 240 இற்குக் குறைந்த சொற்களை தட்டச்சு செய்வதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ. 30 உம் செலுத்தப்படல் வேண்டும். இது தவிர ஸ்ரென்சில்கள் தட்டச்சிடுவதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ. 50 செலுத்தப்படல் வேண்டும்.

Related posts: