இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால்தான் நான்கு இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தன!

Tuesday, July 12th, 2016

இந்திய இலங்கை ஒப்பந்தம் 13 திருத்தத்தை மாத்திரம் கொண்டு வரவில்லை. அது ஆயுதம் தூக்கி போராடிய ஈபிஆர்எல்எப், புளொட், டெலோ, ஈபிடிபி ஆகிய இயக்கங்களின் ஆயுதங்களையும் கீழே வைக்க வழி சமைத்தது.

இந்த ஒப்பந்தத்தை நம்பியே இந்த இயக்கங்கள் தேர்தல் முறைமை ஜனநாயக வழிக்கு திரும்பின என்ற உண்மைகளை, 13ம் திருத்தம் எங்கள் நாட்டின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்டது எனக்கூறும் சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற, மூத்த தமிழ் தொழிற்சங்கவாதி ஐ.தி.சம்பந்தன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மூத்த தமிழ் தொழிற் சங்கவாதி ஐ.தி.சம்பந்தனின், தமிழ் அரசு பணியாளர்களின் போராட்டம். 1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தினால் உருவான மொழிப்பிரச்சினையை அடிப்படையாக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

இன்று அந்த மொழி விவகார அமைச்சராக நான் இருக்கின்றேன். ஆட்சி மொழி தொடர்பில் சட்டம் இருக்கிறது. ஆனால், அது நேற்று வரையில் நடைமுறை ஆகவில்லை. இப்போது நான் இந்த பொறுப்பை ஏற்றதுடன் திட்டமிட்டு பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளேன்.

ஒவ்வொரு அமைச்சுக்கும் ஆட்சிமொழி சட்டத்தை அமுல் செய்ய விசேட நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தும் ஒரு அமைச்சரவை பத்திரம் என்னால் கடந்த வாரம் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இப்போது, அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியத்துக்கு வந்த பின்னர் ஐந்து வருடங்களில் இரண்டாம் ஆட்சி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது.

இது நடைமுறையில் அமுல் ஆவதில்லை. அரசு பணியில் சேர்ந்த பின்னர் இவர்கள் மொழி கற்பதில்லை.

ஏதாவது போலி வழிகளை பாவித்து தமிழ் மொழியை கற்றோம் என்று கூறி சான்றிதழை பெற்று மேலதிக கொடுப்பனவையும், பதவி உயர்வுகளையும் பெற்று கொள்கிறார்கள்.

இனி இந்த விளையாட்டை நான் அனுமதிக்க போவதில்லை. அரசு பணிக்கு வந்த பின்னர் அல்ல, வரமுன்னரே இவர்கள் இரு மொழி தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன்.

நாட்டின் 41 இருமொழி பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள எல்லா பொலிஸ், மருத்துவமனை சேவை, பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என்ற அமைச்சரவை பத்திரமும் அடுத்த வாரம் என்னால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.

அதாவது, இனிமேல் இருமொழி பிரிவுகளில் இருமொழி அறிவு இருந்தால் மாத்திரமே தொழில் வழங்கப்படும். மொழிப்பிரச்சினை தீர்வு, தமிழ் அரசு ஊழியர்களுக்கு மட்டும் காட்டப்பட்ட பாரபட்சம் நீக்கம் என்பவை இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்னோடியாக இருந்து வழிக்காட்டும். ஆனால், மொழி உரிமை உறுதிப்படுத்தப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும் என்று அர்த்தம் இல்லை.

தேசிய இனப்பிரச்சினை தீர அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதை நான் மிகத்தெளிவாக அறிந்துள்ளேன். இன்று அதிகாரப்பகிர்வு பற்றி பேசும்போது சில சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் 13ம் திருத்தத்தைகூட இன்னமும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என்று தெரிகிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் 13 திருத்தத்தை மாத்திரம் கொண்டு வரவில்லை. அது ஆயுதம் தூக்கிப் போராடிய இயக்கங்களின் ஆயுதங்களையும் கீழே வைக்க வழி சமைத்தது.

இந்த ஒப்பந்தத்தை நம்பியே பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பின என்ற உண்மைகளை, 13ம் திருத்தம் எங்கள் நாட்டின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்டது எனக்கூறும் சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பிரிபடாத இலங்கை என்ற அடிப்படைக்குள் இருந்து அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் இன்று ஜனநாயக போராட்டத்தை நிதானமாக முன்னெடுக்கின்றோம்.

இந்த செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கியாக கரங்கோர்த்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் என்பதை, இந்த மேடையில் இருக்கும் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்

Related posts: