இடி தாங்கிகளை  குடாக்கடலில் பொருத்தித் தருமாறு கோரிக்கை!

Monday, November 21st, 2016

யாழ்ப்பாணம் – குடாக்கடலில் மின்னலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருதி இப்பகுதியில் குறித்த சில இடங்களில் இடிதாங்கிகளைப் பொருத்தித்தருமாறு பாசையூர் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசையூர் மற்றும் ஏனைய அயல் கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வது குடாக்கடலை நம்பியே. ஆனால் ஏனைய கடற்பகுதியில் ஏற்படும் மின்தாக்கத்தை விட இக் கடற்பகுதியில் அதிகளவு மின்னல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் வருடா வருடம் மீனவர்கள் இறக்கும் துரதிஷ்டங்கள் இடம்பெறுவதுடன், உண்மைகளையும் இழக்க வேண்டிய நிலை உள்ளதென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது மாரி மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது அச்சத்துடனேயே பொழுதை கழிக்க வேண்டியுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் இடியும் மின்னலும் குடாக்கடலில் அதிகமாக இருக்கும். இதனால் நாம் உயிருடன் கரை திரும்புவோமா என்ற அச்சநிலையிலேயே தொழிலை மேற்கொள்ளவேண்டியுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இடிதாங்கி அமைப்பது தொடர்பாக 2009ஆம் ஆண்டு காலப்பதியில் அப்போதைய அராசாங்க அதிபரிடம் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். அவர் இடிதாங்கி ஒன்றை பொருத்தித் தருவதாக கூறியிருந்தார். பின்னர் அவ் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. எனவே, தற்போதுள்ள அரசாங்க அதிபர் மீனவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு, அரியாலை, தலைமுனை பகுதி, பூநகரில் கல்முனைப்பகுதி, யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் தலா ஒரு இடிதாங்கியையும் பொருத்தி தருமாறு பாசையூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

lightning-rod719-x-1376-53-kb-jpeg-x

Related posts: