விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகி வருகின்றது.

விஜயதாஸ ராஜபக்சவின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது. அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் ஜனாதிபதியையும் அரசையும் பழிவாங்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

தனது உயிருக்கு ஜனாதிபதி கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்று அவர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என கூறியுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்துக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சாகர காரியவசம் நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: