ஆலோசனைப்படி பசளையிட்டால் தென்னை உற்பத்திகளை அதிகளவில் பெறலாம்!

Friday, October 27th, 2017

வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் தொலமைற் அசேதனப் பசளையை தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் ஆலோசனைக்கு அமைவாக பயன்படுத்தினால் விளைச்சல் சிறப்பாக அமையும் என்று சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் சேதனப் பசளையை அதிகம் பயன்படுத்துமாறே நாம் கூறி வருகிறோம். ஆனால் மண்ணின் தன்மை ஆராயப்பட்டு மண்ணில் மக்னீசியம் சல்பேற் குறைவாக உள்ள பிரதேசங்களில் தொலமைற் இரசாயன உரத்தை பயன்படுத்துமாறு நாம் கூறியுள்ளோம். தென்னை ஓலைகளில் மஞ்சள் நிறப் படிவுகள் ஏற்பட்டால் பச்சையம் உற்பத்தி பாதித்துள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். அப்படி மஞ்சள் நிறப் படிவு ஏற்பட்டால் விளைச்சல் தடைப்படும். எனவே தொலமைற் இரசாயனத்தை பயன்படுத்துமாறு கூறியுள்ளோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், வேலணை ஆகிய பகுதிகளில் இந்த உரம் பயன்படுத்தத் தேவையில்லை என்று எமது ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.

ஒரு மரத்துக்கு ஒரு வருடத்திற்கு ஒரு கிலோகிராம் உரம் இட்டால் போதும். அதிகமாக உரம் இட்டால் அதிக விளைச்சல் தரும் என்று கருதாதீர்கள். அப்படி உற்பத்தி அதிகரிக்காது. அதனால் எந்தப் பயனும் இல்லை. மண்வளம் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைவடையுமே தவிர வேறொன்றும் இல்லை. உரத்தைப் பயன்படுத்துபவர்கள் 2 அடி சுற்று வட்டத்தில் மண்ணை கொத்திப் பண்படுத்தி அதனை இட வேண்டும். ஆகவே இது தொடர்பாக எமது சபையின் ஆலோசனைகளைப் பெறுவது சிறந்தது. இதற்கான உரமானியமாக ஒரு மரத்துக்கு 25 ரூபா வீதம் 600 மரங்களுக்கான மானியம் வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: