ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கவும்!

Monday, February 13th, 2017

கடந்த காலங்களில் வடமாகாணத்தில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டபோது புறக்கணித்து ஒதுக்கப்பட்டு வந்த, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட ஆசிரிய உதவியாளர்களை, 01.07.2013இல் இருந்து இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கவும் இதற்கு வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பாதிக்கப்பட்ட வன்னி  ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த 2005ஆம் ஆண்டு வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, தமக்கான நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அக்காலப் பகுதியில் தாமக்கான நியமனங்கள் அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை  அதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களின் போதும் நாம் அனைவரும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தமையால், எமக்கான ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டோம் என, பாதிக்கப்பட்ட வன்னி  ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்தனர்.

வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் யுத்த காலம் உட்பட 15 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் சேவையாற்றி வரும் தம்மை, இன்னமும் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத நிலையில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி கவலை தெரிவிக்கும் அவர்கள் தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றி ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013ஆம் திகதியிலிருந்து என்றாலும், தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்த்தது, தமக்கான சேவைக்காலத்தைக் கணிக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக போர்ப் பிரதேசமான வன்னிப் பகுதிகளில் பல்வேறு கஷ்டங்களுக்கும் மத்தியில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய தமது நிலைப்பாடு பற்றி, தற்போது வடமாகாண கல்வி அமைச்சராகவிருக்கும் அப்போதைய வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த, வடமகாணக் கல்வி அமைச்சர் குருகுலராஜாவுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 15வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர்களாகச் சேவையாற்றிய தமது வயதைக் கருத்திற்கொண்டு தம்மை 01.07.2013 இல் இருந்து இலங்கை ஆசிரியர் சேவை தரம்3-2 இற்குள் உள்ளீர்த்து, 2013இல் இருந்து தமக்கான சேவைக்காலத்தைக் கணிக்க வடக்கு மாகாண சபை, கல்வி அமைச்சு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

jaffna_teachers

Related posts: