யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடந்த கொலை வழக்கு மூன்று தினங்கள் தொடர் விசாரணை!

Thursday, September 22nd, 2016

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிபதி இளஞ்சசெழியன், ஒக்டோபர் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளான புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் தொடர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன், சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சுமத்தி, யாழ் மேல் நீதிமன்றத்தி;ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு முதற் தடவையாக கடந்த 6 ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக, எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வியாழன்று 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகிய எதிரிகள், தாங்கள் குற்றமற்றவர்கள் – நிராதிபதிகள் என தெரிவித்ததைத் தொடர்ந்து மூன்று தினங்கள் தொடர் விசாரணைக்கு திகதி குறித்ததுடன், எதிரிகள் 6 பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

எதிரிகள் சாட்சிகளுடன் எதுவிதமான தலையீடுகளிலும் ஈடுபடக் கூடாது. ஒழுங்காக நீதிமன்ற விசாரணைகளுக்கு சமூகமளிக்க வேண்டும். நிபந்தனைகளை மீறினால், பிணை ரத்துச் செய்யப்பட்டு, அனைவரையும் விளக்கமறியலில் வைத்து, வாழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

vidya-case-court-03

Related posts: