அரச உடமையாக்க வேண்டும் என கோரிக்கை!

Thursday, July 28th, 2016

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியையும் அதனுடன் தொடர்புடைய வைத்தியசாலையையும் அரசுடமையாக்க வேண்டும். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும். அதுவரையில் எமது போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் நேற்று(27), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய வைத்தியசாலையை மாத்திரம் அரசுடமையாக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். அரசுடமையாக்குவதாயின், மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து அரசுடமையாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

‘இந்து – லங்கா ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் அரசாங்கம் தனக்கென ஒரு தேசிய கொள்கையை உருவாக்கியதன் பின்னர் மேற்கொள்ளுமாறும் அவ்வாறல்லாது விடில், பாதிக்கப்படுவது இலங்கையே. ஏனெனில், இந்தியாவுக்கென வர்த்தக ரீதியான தேசிய கொள்கையொன்று உள்ளது. ஆனால், இலங்கைக்கு அது இல்லை. இவ்வொப்பந்தத்தின் மூலம் இந்தியா பயனடையக் கூடும். ஆனால், இலங்கைக்கு எவ்விதப் பயனும் இல்லை.

‘வர்த்தக நோக்கம் கருதியவர்களே இந்து – லங்கா ஒப்பந்தினை ஊக்குவிப்பார்கள். இலங்கை வரலாற்றில் வர்த்தக நோக்கங்கருதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் ஏற்பட்ட நட்டங்களை அரசாங்கமோ குறித்த வர்த்தகர்களோ ஏற்றுக்கொண்டதில்லை. அதனை ஏற்று அனுபவித்தது அப்பாவிப் பொதுமக்களே.

‘பொலன்னறுவை மாவட்ட சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிடில், வடமத்திய மாகாண வைத்திய அதிகாரி அனைவரும் இரண்டொரு தினங்களில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இறங்கவேண்டி ஏற்படும். முறைகேடான வகையில் வைத்தியர்களுக்கான இடமாற்றங்களை குறித்த சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர் மேற்கொள்கின்றார். இவ்விடயம் தொடர்பில் வடமத்திய மாகாண சபை தலையிடவேண்டும்.

‘மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு எதிரான அரசாங்கத்தினது எந்தவொரு செயற்றிட்டத்துக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒத்துழைப்பு நல்கும். சுகாதார அமைச்சினால் சிகரெட்டு பக்கெட்டுக்களின் வடிவமைப்பினை அவுஸ்ரேலியா சிகரெட்டு பக்கெட்டுக்களின் வடிவமைப்பின் பாணியில் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

‘சிகரெட்டுக்காளால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் அறிவுத்தல்கள் அடங்கிய புகைப்படத்தினை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறும் சிகரெட்டு பக்கெட்டுக்களின் வடிவமைப்புத் தொடர்பில் அரசாங்கம் நீண்டதொரு விவாதத்தினை மேற்கொண்டதன் பின்னர் மேற்கொள்ளுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது’ என அவர் தெரிவித்தார்.

Related posts:

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க "புனர்வாழ்வு நிலையம்" அவசியம் - வைத்தியர் சத்...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...
மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் ...