அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை அறிவிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022

வாக்காளர் பெயர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். அதன் பின்னர் அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால், 2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முடியும் என்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் என்று உள்ளுராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆயுட்காலத்தை குறைப்பதற்கு அல்லது நீடிப்பதற்காக அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு காணப்படுவதாகவும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆயுட் காலத்தை குறைப்பதானாலும், நீடிப்பதானாலும் அதற்கான அதிகபட்ச காலம் ஒரு வருடம் மாத்திரமேயாகும்.

அதற்கமையவே இவ்வாண்டு மார்ச் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தல், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேர்தலொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எமக்கு சுமார் இரண்டு மாதங்கள் போதுமானவை.

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பிப்பதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். இது தொடர்பில் ஊடக அறிவித்தலையும் வெளியிட்டோம்.

இதற்கிடையில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அமைச்சரால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்நிலையிலேயே கடந்த செப்டெம்பர் மாதம்முதல் மீண்டும் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதன்போது வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் ஒக்டோபர் 31 ஆம் திகதி இறுதிப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் 18 வயதுடைய இளைஞர்களுக்க வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை நாம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். இதற்கு முன்னர் 19 அல்லது 20 வயதிலேயே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

62 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெப்ரவரி முதலாம் திகதிமுதல் மே மாதம் 31 ஆம் திகதிவரை, ஜூன் முதலாம் திகதிமுதல் செப்டெம்பர் 30 ஆம் திகதிவரை புதிய இளைஞர் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். சட்ட ரீதியாக இவற்றை இறுதி செய்வதற்கு முன்னர் முன்னெடுப்பதற்க சில படிமுறைகள் காணப்படுகின்றன.

இந்த வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்கு முன்னர் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டால், குறித்த இளைஞர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பினை இழப்பார்கள்.

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடங்குவோருக்கு மாத்திரமே வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிட்டும். 62 வருடங்களில் பின்னர் ஆணைக்குழுவினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட அந்த உரிமையை நீக்குவதற்கு நாம் தயாராக இல்லை.

எனவே இம்மாத இறுதியில் இந்த வாக்காளர் பெயர்பட்டியலை இறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கமைய அதன் பின்னர் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவிப்பதற்கான அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை நிறைவேற்றுவதே ஆணைக்குழுவின் இலக்காகும். அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால் இதனை எம்மால் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: