அனோவா இன உருளைக்கிழங்குகளை விவசாயிகளிடம் திணிப்பதை நிறுத்துக – யாழ். அரச அதிபருக்கு மகஜர்

Thursday, December 7th, 2017

விவசாயிகளால் விண்ணப்பிக்கப்படாத அனோவா இன உருளைக்கிழங்குகளை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் திணிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் விவசாயிகளால் கொடுக்கப்பட்ட மகஜரில், இந்த வருடம்(2017) உருளைக்கிழங்குச் செய்கைக்காக விவசாயிகளால் சசி மற்றும் றெட்ல சோடா (சிவப்பு இன) ஆகிய இரு இன வகையிலான விதை உருளைக்கிழங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு தலா 4 அந்தர் வீதம் விதை உருளைக்கிழங்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது எம்மால் விண்ணப்பிக்கப்படாத மேற்படி அனோவா இன உருளைக்கிழங்கு, விவசாயிகள் அனைவருக்கும் தலா ஒரு அந்தர் வீதம் கட்டாயமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணமும் அறவீடு செய்யப்பட்டு வருகிறது.

அனோவா இன விதை உருளைக்கிழங்கு கடந்த காலங்களில் பயிரிட்டு எவ்வித அறுவடையும் செய்யப்படவில்லை என்பதை அதிகாரிகள் அறிந்த நிலையில் மீண்டும் விவசாயிகளுக்குத் திணிப்பது நலிவுற்றிருக்கும் விவசாயிகளை மேலும் நட்டமடையச் செய்யும் செயற்பாடாகும்.

எனவே மேற்படி விடயத்தை கவனத்தில் கொண்டு மானிய அடிப்படையில் வழங்கப்படும் நான்கு அந்தரையும் எம்மால் விண்ணப்பித்த இன விதை உருளைக்கிழங்குகளை பெற்றுத்தர ஆவன செய்யுமாறு குறித்த மகஜரில் மேலும் கோரப்பட்டுள்ளது

Related posts: