கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி – அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிப்பு!

Saturday, June 12th, 2021

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளது.

தற்போது நாட்டில் மரணம் ஒன்று சம்பவித்த தினத்தில் அன்றி, அந்த மரணம் கொவிட் நோயால்தான் இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்தி பிரிதொருநாளிலேயே அறிக்கை வெளியாக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த 10 நாட்களில் வெளியாக்கப்பட்ட அறிக்கைகளின் படி, இறுதி 10 நாட்களில் 546 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் முதல் 500 கொரோனா மரணங்கள் பதிவாவதற்கு 347 நாட்கள் சென்றிருந்தன. அதேவேளை இரண்டாவது 500 கொரோனா மரணங்கள் 72 நாட்களில் பதிவாகியிருந்தன.

ஆனால் கடந்த 13 நாட்களில் மூன்றாவது 500 மரணங்கள் பதிவாகியுள்ளனதாகவும் குறித்த அறிக்கையூடாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் கடந்த 10 ஆம் திகதி வரையான 10 நாள் காலப்பகுதியில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 589 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி இறுதி 500 மரணங்கள் வெறும் 10 நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62 பேர் கொவிட் தொற்று நோயினால் உயிரிழந்ததாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மரணங்களில் மே மாதம் 8ஆம் திகதிமுதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 7 பேரின் மரணங்களும், ஜுன் மாதம் 01முதல் 10 வரையான காலப்பகுதியில் 55 பேரின் மரணங்களும் சம்பவித்துள்ளன. அவர்களில், 13 பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 05 பேர் உயிரிழந்திருந்ததுடன், 44 பேர் வைத்தியசாலைகளில் சிசிக்சைப்பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: