அதிக விலைக்கு பொருட்களை விநியோகிக்கும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவர்?

Saturday, July 16th, 2016

தற்போது வெளியிடப்பட்டுள்ள நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விநியோகிக்கும் வர்த்தகர்களை கைதுசெய்வுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன..

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார்.

இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

16 வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் நேற்றுமுன்தினம் இரவு முதல் நிர்ணய விலை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கோழியிறைச்சி, சிவப்பு பருப்பு, நெத்தலி, கடலை, பயறு, ரின்மீன், வெண்சீனி, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் உள்ளூர் பால்மா, இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கட்டா கருவாடு, சாலயா மற்றும் மாசி கருவாடு, சஸ்டஜன் மா என்பவற்றிற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது

Related posts: