பயிர்களைச் சுற்றியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, January 11th, 2023

பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கைகளைச் சூழ பரவி வரும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மஞ்சள் புள்ளி நோய், பூச்சி மற்றும் வட்டப்புழு தாக்குதல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நெற்பயிர்ச் செய்கையுடன் தொடர்புடைய நான்கு மாவட்டங்களில் இந்நோய்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விவசாயத் துறை விசேட குழுக்களை நியமித்துள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியை குழுக்கள் ஆரம்பித்துள்ளன.

நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து பங்குதாரர்களையும் அழைத்து ஒரு வாரத்திற்குள் உடனடி கலந்துரையாடலை நடத்தவும் அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

பெரும் போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், நெல் மற்றும் மக்காச்சோளப் பயிர்ச்செய்கையின் வெற்றியின் அடிப்படையில் இந்தாண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுப்பதிலும் அரசாங்கம் வெற்றிபெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: