அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!

Wednesday, August 31st, 2016

 

கொடிகாமம், வரணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த வயோதிபரை தாக்கவிட்டு வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் 2 சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்களை, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். கடந்த 25ஆம் திகதி கொடிகாமம் – இயற்றாலை போக்கன் பகுதியிலுள்ள வயோதிபர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பலொன்று, வயோதிபரை கடுமையாக தாக்கிவிட்டு 13 பவுண் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்திருந்தனர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்த யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த நகைகடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து வாகனமொன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: