அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால்  பாதிக்கப்படும் வில்லூன்றி சோழபுரம் பகுதி மக்கள்

Saturday, April 16th, 2016

யாழ். மாநகர சபைக்குட்பட்ட ஜே-83 பிரிவுக்குட்பட்ட வில்லூன்றிப் புனிதத்  தீர்த்தக் கேணிக்கு அண்மையிலுள்ள சோழபுரம் பகுதியின் குறுக்கு வீதி, வில்லூன்றிப் பிள்ளையார் கோவில் வீதி ஆகிய வீதிகள்  நீண்ட காலமாகத் திருத்தப்படாத காரணத்தால் இப் பகுதி மக்களும், வீதியால் பயணிப்பவர்களும் பயணிக்க முடியாதவாறு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முன்னர் குறித்த வீதி அமைந்துள்ள பகுதியிலுள்ள காணிகள்  யாழ்ப்பாணம் வில்லூன்றிப் பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமானதாகக் காணப்பட்டதாகவும் , பின்னர் இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமுடையதாக மாற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இவ்வாறு மாற்றப்பட்டு நீண்ட காலமாகியும் குறித்த இரு வீதிகளும்  திருத்தப்படாமை தொடர்பில் பல தடவைகள் யாழ். மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கைகள்  எதுவும் எடுக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
4cabd36d-27f0-4a8b-a9f9-a5d59ea758e5
அத்துடன் சோழபுரம் பகுதியின் குறுக்கு வீதி வீதியில் பொருத்தப்பட்டுள்ள  மின் விளக்குகள் பல மாதங்களாக  ஒளிராத காரணத்தால் இப் பகுதிப் பொதுமக்களும், வீதியால் பயணிப்பவர்களும் இரவு நேரங்களில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் விடயம் சம்பந்தமாக அப் பகுதிப் பொதுமக்களால் யாழ். மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாநகர சபை மின்சாரப் பகுதியினர் நிலைமையை நேரில் வந்து பார்வையிட்டு மூன்று மாதங்கள் கடந்த போதும் மின்விளக்குகள் திருத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது. வில்லூன்றிப் பிள்ளையார் கோவில் வீதியில் மின் விளக்குகள் இதுவரை பொருத்தப்படாத காரணத்தால் இரவு நேரங்களில் வீதியால் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
02410a04-7475-48b7-964c-0a34ad368940
மேலும் வில்லூன்றிப் பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படாத காரணத்தால் தாம் பெரும் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த வாய்க்கால் உரிய பொறிமுறைகளுடன் அமைக்கப்படாத காரணத்தால் மழை காலங்களில் தாம் ஒவ்வொரு வருடமும் வெள்ளப் பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பின் தங்கிய வில்லூன்றிச் சோழபுரம் பகுதி மக்கள் அன்றாடக் கூலித் தொழிலையே தமது உழைப்பாகக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வீதிகள்  திருத்தப்படாமை, மின் விளக்குகள் ஒளிராமை மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்படாமை, கழிவு வாய்க்கால் புனரமைக்கப்படாமை போன்ற பல்வேறு காரணங்களால்  பாதிக்கப்பட்டுள்ள தமக்கு உரிய  நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரப் பொறுப்பு வாய்ந்த தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts: