13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 13th, 2017

கடந்தகால அனுபவங்களை கருத்திற்கொண்டு நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்லவேண்டியது காலத்தின் அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இன்றையதினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆரம்ப காலங்களில் ஒரே இலக்கு நோக்கி அனைத்து தமிழ் போராட்ட இயக்கங்களும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இருந்தபோதிலும் இடைப்பட்ட காலத்தில் இயக்கங்களுக்கு உள்ளும், இயக்கங்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டு அதனை தீர்ப்பதான வழிமுறையாக ஆயுத வன்முறை  தலைதூக்கிக்கொண்டதால் போராட்டம் திசைமாறிச் சென்றது. இதனால் உரிமை விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் அதன் இலக்கு நோக்கிய பயணத்தில் வழிதவறிச் சென்றது.

இந்நிலையில்தான் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. போராட்டம் திசைமாறிச் சென்றதால் இவ்வழிமுறைதான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சரியானதொரு நிலைப்பாடாக அமையுமென்று கருதி ஆயுத வழிமுறைப் போராட்டத்தை தவிர்த்து நாம் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பியிருந்தோம்.

அக்காலத்திலேயே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாது அதனை எமது இனப் பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளியாக கொண்டு அடுத்த கட்டத்திற்கு நாம் படிப்படியாக முன்னகர வேண்டும் என்பதையும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

நாம் முன்னெடுத்துவரும் இந்த நிலைப்பாட்டை இன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

நாம் கூறியது போன்று அப்போதே இந்த 13ஆவது திருத்தச்சட்டத்தை இதர தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொண்டிருந்தால் எமது இனம் வரலாறு காணாத இடப்பெயர்வுகளையும் உயிர், உடமை உள்ளிட்ட பேரிழப்புக்களையும் சந்தித்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியிருக்காது.

அதுமட்டுமல்லாது நாம் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்று ஒரு ஒளிமயமான வாழ்வியல் சூழ்நிலையையும் உருவாக்கியிருந்திருக்க முடியும்.

ஆனால் தமிழ் மக்களது பிரதிநிதிகளாக தம்மை முன்னிலைப்படுத்திய இதர தமிழ் அரசியல் தலைமைகள் இந்த அரிய சந்தர்ப்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு அப்போதும் வந்திருக்கவில்லை.  இத்தகைய பிரதிபலன்களால் தான் எமது மக்கள் 2009 மே வரையான இறுதி யுத்தம் வரை சென்று விலைமதிக்க முடியாத உயிர்களையும் உடமைகளையும் இழக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டனர்.

இருப்பதைப் பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றம் காணவேண்டும் என்பதே இற்றைவரையான எமது நிலைப்பாடாக இருந்துவருகின்றது.  எமது இந்தப் பயணத்தில் உங்களது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் சமூகத்தின்பால் நீங்கள் வைத்துள்ள அன்பையும் வெளிக்கொண்டு வர எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது எனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளருமான தவநாதன், முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் கிருபன் ஆகியோர் உடனிருந்தனர்.

DSCF0199

Related posts: