13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உதவும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 14th, 2018

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வாக மாவட்ட சபைகளை அறிமுகம் செய்வது என்ற இராஜாங்க வெளிவிவகாரஅமைச்சர் வசந்த சேனநாயக்கவின் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது.

1980ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட சபைகள் திட்டத்தை தமிழ் மக்கள் புறக்கணித்தனர். இணைந்த வடக்கு, கிழக்கு மாநிலத்தில் சுயநிர்ணய உரிமைகளுடன் வாழும் அரசியல் தீர்வொன்றுக்காகவே தமிழ் மக்கள் பலபோராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அன்மையில் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வானது மாவட்டசபைகளை ஏற்படுத்துவதேயாகும் என்று இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக தொடர்ந்து கருத்துரைத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வானது, ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வுக்கானதாகவும், சமத்துவமும், கௌரவமானதுமாகவும் அமைவதுடன், மத்திய ஆட்சியாளர்களால் மீண்டும் பறிக்கமுடியாத சட்டவலுவுடையதாகவும் இருக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தமிழ் மக்களின் நியாயமான இந்த அபிலாi~களை புறக்கணித்து யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவதுபோல் மாவட்ட சபை முறைமையை தீர்வாக பரிந்துறைத்து, 1980 ஆம் ஆண்டுகளில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் செய்த அதே வரலாற்றுத் தவறு மீண்டும் நடந்துவிடக்கூடாது.
இன்றுள்ள அரசியல் சூழலில் இலங்கையின் அரசியல் யாப்பில் இருக்கின்ற தீர்வை நோக்கிய முன்மொழிவாகவும், இலங்கையர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுமான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், அதிலிருந்து அடுத்தகட்டமான இறுதி இலக்குநோக்கி முன்னேறுவதுமே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~களை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி சட்டவலுவோடு முன்னேறுவதற்கு இன்றுள்ள ஒரே பாதையானது, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுதான். அந்தப் பாதையையும் மூடிவிடுவதற்கே இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.
ஆகவேதான் 13ஆவது திருத்தச் சட்டத்தை செயலிழக்கச் செய்துவிட்டு, 38 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் தூக்கி எறியப்பட்டமாவட்ட சபை முறைமையை மீண்டும் உயிர் கொடுத்து நடைமுறைப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வருமா? வராதா? என்பது கேள்விக்குறியதாகியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~களை வென்றெடுக்க கைவசமிருக்கும் ஒரே பிடிமானம் 13ஆவதுதிருத்தச் சட்டம் மட்டுமேயாகும்.

ஆகவேதான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு என்றும், அதனூடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங்கட்டமாக முன்னேறுவதே இறுதி இலக்கை அடைந்துகொள்ளும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts: