மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Monday, March 18th, 2019


மலையகத் தொழிலாள மக்களின் நாளாந்த ஊதியப் பிரச்சினை இன்னமும் அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு முடிவினை எட்ட முடியாமலேயே காலங்கடத்தப்பட்டு வருகின்றது.

வரவு – செலவுத் திட்டத்தில் மலையகத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா ஊதியம் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், அதுவும் சாத்தியமில்லாமல், தேயிலைச் சபையுடன் பேசியே அதுதொடர்பில் முடிவெடுக்கப்படும் என வரவு – செலவு திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேற்படி மேலதிகக் கொடுப்பனவை வழங்கும் முகமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு இன்னும் காணப்படவில்லை என தேயிலைச் சபையின் தலைவர் இப்போது தெரிவித்துள்ளார்.

எனவே, இதுவும் அம்மக்களுக்கு கனவாகிவிடுமோ என்ற சந்தேகமே காணப்படுகின்றது. எனினும், இந்த நாட்டின் ‘முதுகெலும்பு முதுகெலும்பு’ எனக் கூறிக் கொண்டே அந்த மக்களை நிமிர்ந்தெழ விடாமல் அவர்களது முதுகெலும்புகளை முறித்து விடாதீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;       

தொழில் திணைக்களம் மற்றும் அதனது மாவட்ட கிளை அலுவலகங்கள் பலவற்றில் தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ள பணியாளர்களது பற்றாக்குறை காரணமாக சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்ற தொழிலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.

மேற்படி திணைக்களத்தின் கீழ் குறிப்பாக தனியார்துறை தொழில் வழங்குநர் மற்றும் தொழிலாளர்களுக்கிடையிலான உறவைப் பேணுகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இன்று தனியார்துறைகளில் பணியாற்றுகின்றவர்களாக தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களில் பலரும் தமிழ் மக்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில், தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுமானால், இத்தொழிலாளர்கள் பெரிதும் சிரமங்களையே அடைய நேரிடுகின்றது. ஊழியர் சேமலாப நிதியாக இருக்கட்டும், ஏனைய தொழில்துறை சார்ந்த நன்மைகளாக இருக்கட்டும் அதன் மூலமான பயன்களை இம் மக்கள் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் தமிழ், முஸ்லிம் மக்களையும் மேற்படி திணைக்களப் பணிகளில் இணைத்துக் கொள்வதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், அவை தவிர்ந்து தமிழ் மொழி மூலப் பரிச்சயமுள்ள ஏனைய மாவட்டங்களிலும் போதியளவில் அவர்களை பணிகளில் அமர்த்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேநேரம், தமிழ் மொழி கற்ற சிங்கள பணியாளர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துகின்றோம் என நீங்கள் கூறுவீர்களாயின் அது உண்மையிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகாது. ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் மொழியைக் கற்கிறோம் என சிங்கள அரச ஊழியர்கள் பலரும், சிங்கள மொழியைக் கற்கிறோம் என தமிழ் அரச ஊழியர்கள் பலரும்  அம் மொழிகளை ஒழுங்குறக் கற்காமல், அதற்கான அரச நிதியினைப் பெற்றுக் கொண்டு, வெறும் சான்றிதழ்களை மாத்திரமே  வைத்திருக்கின்றனர் என்ற விடயமும் இருக்கின்றது. எனவே இது தொடர்பில் தொழில் அமைச்சர் அவர்கள் அதிக அவதானமெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts:

நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்...
ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...