சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, December 19th, 2019


பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவுறுத்தினார்.

பூநகரிப் பிரதேசத்திற்கான விஜயம் ஒன்றை இன்று(19.12.2019) மேற்கொண்ட கௌரவ அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்களுக்கும் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்ககளின் சமாசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தாங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை எடுத்துக் கூறிய பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகள், பூநகரி பிரதேச கடலினுள் ஊடுருவுகின்ற ஏனைய பிரதேச மீனவர்கள் சட்ட விரோத மீன் பிடி முறைகளைப் பயன்படுத்துவதினால் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற தாங்கள் பாதிக்கபடுவதாக முறையிட்டனர்.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய கௌரவ அமைச்சர் அவர்கள், சட்ட விரோத நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியதுடன் கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதேவேளை, பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு ஒன்றிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்.

இதன்போது, கௌரவ அமைச்சர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டன. அவற்றில் உடனடியாக அமுல்ப்படுத்தக் கூடிய கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், தற்போதைய அரசாங்கம் நான்கு மாதங்களுக்கு தேவையான இடைக்கால நிதியினையே தற்போது ஒதுக்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே புதிய திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்மானங்களை மேற்கொண்டு தன்னுடைய கரங்களைப் பலப்படுத்தினால் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தன்னால் நிறைவேற்ற முடியும் என்ற உறுதி மொழியையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - செயலணியிடம் டக்ளஸ் தேவானந்...
மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் - அதிகாரிகளுடனான சந்திப்...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....