வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016

எமது நாட்டைப் பொறுத்த வரையில், தங்களது குடும்பங்களை வறுமை நிலையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகக் குறிப்பாக, பெண்கள் உழைக்க வேண்டிய நிலையில், அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்ற ஒரு துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையே காணப்படுகின்றது.

அதே நேரம், ஏனைய வசதியுள்ள குடும்பங்களைப் போல் தாங்களும் வாழ வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக, நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த பெண்களும் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையை நாடுகின்றனர்.

இவ்வாறு செல்கின்றவர்கள் எவ்வித தொழில் முன் அனுபவங்களோ, தொழில் திறன்களோ இன்றிய நிலையில் வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்கின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால், வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர் என்றும் கூறலாம். இந்த வணிகமானது, சட்டபூர்வ ரீதியிலும், சட்ட பூர்வமற்ற ரீதியிலும் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு, பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்ற நிலையில், எமது பகுதியிலிருந்து ஆண்களை சட்டபூர்வமற்ற வகையில் அவுஸ்திரேலியாவுக்குப் பணம் திரட்டும் நோக்கில் அனுப்பிவைத்து வியாபாரம் நடத்திய பெண்ணும் இங்கு இருக்கிறார்.

உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்விக்கான வாய்ப்பு, சமூக அந்தஸ்து உள்ளடங்கலான வாழ்க்கைத் தேவைகளை இழந்த நிலையே வறுமை எனப்படுகின்றது.  இவ்வாறு, வறுமை நிலைக்கு உட்பட்டோர் நகரப்புறங்களிலும் பார்க்க, கிராமப் புறங்களிலும், நகரப் புற சேரிப் பகுதிகளிலுமே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுவாக நாட்டில், ஒரு குடும்பத்தில் வறுமை நிலை ஏற்படுவதற்கு, குடும்பத் தலைவனுக்கு தொழில் வாய்ப்பின்மை, அல்லது குறைந்த வருமானம் பெறுவதால் போதிய வருமானம் இன்மை, குடும்பத்தாரின் நோய்கள், போதிய கல்வியறிவு இன்மை, குடும்ப உறுப்பினர்களது அதிக எண்ணிக்கை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்ற நிலையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும்,  எல்லைப் புறக் கிராமங்களிலும் இதற்கு மேலதிகமாக கடந்த கால யுத்தப் பாதிப்புகளும் காரணங்களாக அமைகின்றன.

குறிப்பாக யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத் தலைமைகளை ஏற்கின்ற நிலையில், இவர்களில் பலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணிப் பெண்களாகப் பணியாற்றி வருகின்ற ஒரு நிலை காணப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட சுமார் 1,043 முகவர் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

இவ்வாறு வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்றவர்களில் 0.14 வீதமான பெண்கள் தொழில்வாண்மை பெற்றவர்களாகவும், 0.65 வீதமானோர் நடுத்தர தொழில்வாண்மை பெற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

4.9 வீதமான பெண்கள் தொழில்த்திறன் மிக்கவர்களாக இருக்கின்ற போதிலும், 94 வீதமானோர் எவ்விதமான தொழில் திறனுமின்றி வீட்டுப் பணிப் பெண்களாகவே வெளிநாடுகளுக்கு – அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு, எவ்விதமான தொழில் அனுபவங்களும் இல்லாமல், வெறும் பணத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற அல்லது அனுப்பி வைக்கப்படுகின்ற பெண்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது என்பதை நாம் அன்றாடம் ஊடகங்களில் வருகின்ற செய்திகளின் மூலமாக அறிகின்றோம்.

இது தொடர்பில் கௌரவ வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்  அவர்கள் மிகுந்த அவதானத்தை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன். ஏனெனில், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் உரிய பொறிமுறை ஒன்றை எடுக்கத் தவறிவிட்டோம் என்பதையே அது உணர்த்துகிறது.

குறிப்பாக, வெளிநாடுகளிலுள்ள வீடுகளில் பணிக்காகச் செல்கின்ற எமது பெண்களில் அதிகமானோருக்கு அந்த வீடுகளின் நவீனத்துவங்களுக்கு ஏற்ப பணி செய்ய முடியாமை, அவர்களது மொழியில் உரிய வகையில் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாமை,

அந்தந்த நாடுகளின் கலாசார, பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப சுயமாக இயங்க இயலாமை, அந்தந்த நாடுகளின் தொழில்உறவுச் சட்டங்கள், ஒழுங்குகள் தொடர்பில் போதிய அறிவு காணப்படாமை, போன்ற பிரச்சினைகளுக்கு இப்பெண்கள் முகங்கொடுக்க நேரிடுகின்றது.

எனவே, இதற்கு ஏற்ற வகையில் அப்பணிப் பெண்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கிய பின்னரே, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

துரதிஸ்டவசமாக நமது நாட்டில் அப்படியொரு நிலை இல்லை என்றே கருதுகின்றேன்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விளம்பரங்களை எடுத்துப் பார்த்தால் – அங்கே,உடனடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு! அனுபவம் உள்வர்களும் இல்லாதவர்களும் உடன் வரவும்! கடவுச் சீட்டு உள்ளவர்களும் – இல்லாதவர்களும் வரலாம்! நேர்முகப் பரீட்சை நாளை! நாளை மறுநாள் பயணம் என்றே அந்த விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன.

இப்படியான ஒரு நிலையில், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற எமது பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு – சித்திரவதைகளுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது!

வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக யாரும் கூறலாம். அப்படி எனில் இன்றும்கூட பல ஆயிரக் கணக்கான இலங்கைப் பணிப் பெண்கள் பல நாடுகளில் பாரிய துன்பங்களை அனுபவித்தும், ஒரு சிலர் அதிலிருந்து தப்பி, தூதுவராலயங்களுக்கு ஓடியும் வருகிறார்கள். இது ஏன்? என்பதை நான் இந்தச் சபையிலே கேட்க விரும்புகின்றேன்.

எமது நாட்டுக்கு அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஒரு துறை இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை என பெருமைப்பட்டுக்கொள்ள முடிகின்றது.

ஆனால், தங்களது பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதற்காக வேறு வீட்டுப் பிள்ளைகளைப் பேணி வளர்க்கச் செல்லும் இந்தப் பெண்கள், இறுதியில் தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வையும் சீரழித்து, குடும்பத்தையும் இழந்து, மிகவும் துயரமான வாழ்க்கைக்கே தள்ளப்படுகின்ற துன்ப நிலைகளும் தொடருவதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த வரலாற்றில்தான் நாங்கள் றிஸானா றபீக் போன்ற பெண்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கிச் செல்வோர் தொடர்பில் அதிகளவில் அக்கறை காட்டக்கூடிய வகையிலான நடைமுறை ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்த அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

அதே நேரம், இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரது குடும்பங்கள் இனங்காணப்பட்டு, அக் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்குரிய சில விஷேட திட்டங்களை – மேலும் வலுவுள்ளதாக முன்னெடுக்க வேண்டும் என்றும்

கௌரவ அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:

மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர...
நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
வீட்டுப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்களது நலன்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுற...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...