வீதி விபத்துக்களை  தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2017

வீதி விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் உறுதியான நடைமுறைகளை செயற்படுத்துகின்ற போது, போக்குவரத்து பொலிஸாரின் பொறுப்புகள் பாரியவையாகும். இந்த நிலையில் பார்க்கின்றபோது, குற்றங்களை இழைக்கும் வரையில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் அர்களைப் பிடித்து தண்டனைகளுக்கு உட்படுத்துவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கத்தக்க வழிவகைகளை ஆராய்ந்து, அவற்றை முன்னெடுப்பதே சிறந்த செயற்பாடாக இருக்கும் என்பதை இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பொலிஸார் மறைந்திருக்கின்ற நிலையில் சாரதிகள் அசட்டைப் போக்கிற்கு உட்பட்டு, அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளும் உண்டு. எனவே, பொலிஸார் நேரடியான பார்வையில் வாகன சாரதிகளுக்கு தெரியக்கூடிய வகையில் வீதிகளில் பணியாற்றுகின்ற நிலையில், சாரதிகள் விழிப்படையக்கூடிய சாத்தியங்களே எராளமாகும். அந்த வகையில், வீதி விபத்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அதிகாலை – காலை வேளைகளில் வாகன விபத்துகள் இடம்பெறுவது அதிகரித்துக் காணப்படும் ஒரு நிலையும் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு ஏதுவாக, போக்குவரத்து பொலிஸாரின் சேவையை குறிப்பாக, பிரதான வீதிகளில் இரவு 12.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையில் பரவலாக விஸ்தரிப்பதற்கும், வேகத் தடைகளையும், கண்காணிப்பு உபகரணங்களையும் அவ் வீதிகளில் மேலும் வலுவுள்ளதாக அமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், தகுதியற்ற சாரதிகளை இனங்காண்பதற்கான சோதனை நடவடிக்கைகளை பரவலாக முன்னெடுத்தல், விபத்துக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், தகுதியானவர்களுக்கு மாத்திரம் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோரை பிடிப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை வலுவுள்ளவதாக முன்னெடுத்தல், வீதி ஒழுங்கு விதிகளை மீறுகின்ற சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல், கட்டாக்காலி விலங்குகள் மற்றும் வளர்ப்பின விலங்குகள் பாதைகளில் ஊடுறுவதைத் தடுப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

வீதி விபத்துகள் காரணமாக பலியாகின்றவர்களின் தொகைக்கு சமாந்திரமான தொகையினர் அங்கவீனமாக்கப்படுகின்றனர். இவ்வாறு அங்கவீனமானோர் தொடர்பில் இதுவரையில் ஒழுங்கான கணக்கெடுப்புகள் எமது நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதுகின்றேன். அந்த வகையில், எமது நாட்டைப் பொறுத்தவரையில் மனித உழைப்பு தொடர்பில் வருடாந்தம் ஏற்படுகின்ற நட்டமானது சுமார் 200 மில்லியனுக்கு அதிகமானதாகும் என்றும் தெரிய வருகிறது.

வீதி விபத்துக்களை கூடிய வரையில் குறைப்பதற்கு சர்வதேச ரீதியில் இனங்காணப்பட்டுள்ள ஒரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது, ‘உழைப்பியலை’ அவர்கள் பயன்படுத்துவதால் இந்த வீதி விபத்துகள் கூடுமானவரைத் தவிர்க்கப் பட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது. மக்களது உயரம் – பருமன், கை, கால்களின் நீளம், கண்களின் காட்சிகாண் பலம், உடலின் உயரம், சுமை, பார வேலைகள் செய்யக்கூடிய தகுதி போன்றவை தொடர்பில் தேசிய மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டு மக்களின் உடல் – உள திறன் இந்தளவுதான் என்றொரு தீர்மானத்துக்கு வருதலே ‘உழைப்பியல்’ எனப்படுகின்றது.

இதனடிப்படையில் அந்த மக்களால் பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற மினி வாகனங்களை ஜப்பானியர்களால் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. எனவே, மேற்படி உழைப்பியல் தொடர்பில் நாம் தெளிவுகளைப் பெற்றிருந்தால், எமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்கச் செய்வித்து, அவற்றைப் பெற்றுக்கொண்டு, பயன்பாட்டுக்கு விடக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த முடியும். அந்த வகையில், வாகன பயன்பாடுகள் தொடர்பிலும் ஒரு தேசிய வேலைத்திட்டமாக எமது நாட்டு மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

பெரும்பாலும் அன்றாடம் பாதைகளில் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களை நாம் பார்க்கின்றபோது, ஒரு வாகனத்தில் ஒரு நபர் மாத்திரம் பயணஞ் செய்கின்ற நிலைமைகளே மிக அதிகமாகும். ஆளுக்கொரு வாகனம் என்ற ரீதியில் பாதைக்கு வருகின்றபோது ஏற்படுகின்ற வாகன நெரிசல்கள் அதிகமாகின்ற நிலையில், அதன் ஊடான  பயன்பாடுகள் தொடர்பிலும் நாம் அவதானஞ் செலுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டிலுள்ள பாதைகளுக்கு ஏற்பில்லாத வகையில் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.  சில பாதைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான பாதைகளில் பயணிக்கின்ற வாகனங்கள் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

அதே நேரம், எந்தவொரு கல்வித் தகைமையும் அற்ற, இலகுவாக உள்வாங்கப்படக்கூடிய, ஒரேயொரு பொறுப்புமிக்கத் தொழிலாக சாரதி தொழில் தற்போது எமது நாட்டிலே காணப்படுகின்றது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் அநேகமாக முறையற்ற வழிவகைகளைப் பின்பற்றுகின்ற நடைமுறைகளும் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அந்த வகையில், நாட்டில் தற்போதுள்ள சட்ட திட்டங்கள், வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதுடன், சட்ட திட்டங்கள் இருப்பதன் காரணமாகவே  விபத்துகளைத் தடுக்கின்ற வீதம் அதிகரித்துள்ளது என்றும் கூற முடியாதுள்ளாகவே தெரிய வருகின்ற என்பதையும் இங்க சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வீதி ஒழுங்குகளையும், வாகனங்களைச் செலுத்துகின்ற சட்ட திட்டங்களையும் பின்பற்றாத சாரதிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக தண்டப் பணம் அறவிடுவதால் மாத்திரம் விபத்துகள் குறையப் போவதில்லை. அனைத்து விடயங்கள் குறித்தும் சட்ட ரீதியிலான அணுகுமுறை கடினமாக இருப்பின், சட்டத்தை மேலும் கடினமாக்கி, சாரதிகளின் ஒழுக்கம் தொடர்பிலும், அதே நேரம் பாதசாரிகளின் ஒழுக்கம் தொடர்பிலும் அதிக அவதானமெடுக்கப்பட வேணடியுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

18-1434612393-srilanka-parliament57 copy

Related posts: