வீதியில் போராடும் மக்களுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ்; எம்.பி வலியுறுத்து!

Tuesday, September 4th, 2018

வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைப்போல், கூடிய விரைவில் இந்த நாட்டில் காணாமற்போகக்கூடிய அபாயத்தில் இருக்கின்ற ஏற்றுமதி பயிர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் ஓர் அலுவலகம் அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் தொடர்பான விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகளைக் கண்டறியும் முகமான எமது மக்களின் போராட்டமானது இரண்டாவது வருடத்தை நோக்கி தொடர்கின்றது. இந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் எந்தவொரு செயற்பாடுகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், எமது மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே போராடி வருகின்றனர்.

இத்தகையதொரு நிலையில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மே மாதம் மன்னாரில் இடம்பெற்றிருந்த ஒரு கலந்துரையாடலுடன் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

என்ற போதிலும், இந்த அலுவலகம் தொடர்பிலும் எமது மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதையே மேற்படி அலுவலகத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்துக் காட்டின.

வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட நபர்கள் பற்றிய விசாரணைகள் முடியும்வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என மேற்படி அலுவலகம் பரிந்துரை செய்வதாக கடந்த 30ஆம் திகதி காணமற்போகச் செய்யப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தன்று அந்த அலுவலகத்தின் தலைவர் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த வாழ்வாதார உதவிகள் இப்போதல்ல, எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வாழ்வாதார உதவிகளைப் பெற இந்தக் குடும்பங்கள் ஒன்பது வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறியும் பொருட்டு இதற்கு முன்பதாக அமைக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களும் இத்தகைய ஏற்பாடுகளை வலியுறுத்தியிருந்தன. ஆனால், அவை எதுவும் செயற்படுத்தப்பட்டதாக இல்லை.

ஆனால், இந்த வாழ்வாதார உதவிகள் மட்டுமே எமது மக்களின் தேவை அல்ல. வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகள் பற்றிய தகவல்களை அறிய எமது மக்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். எனவே, எமது மக்களுக்கு நீதி, நியாயம், பரிகாரங்கள் கிடைக்கப் பெற வேண்டும்.

Related posts:

வடக்கில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துவிட்டது- தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டக்ளஸ் எ...
சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் - வட்டுக்கோட்டையில் டக்...
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - அமைச...

இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும...
பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வடமாகாணம் பொருளாதார...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...