விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள முடியாது!

Sunday, December 10th, 2017

விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள முடியாது. ஏனைய உற்பத்தித்துறைகள் குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும். அதற்காக உற்பத்தித்துறையின் உப பிரிவான கட்டுமானத்துறை கூடிய வளர்ச்சி பெற்றிருப்பதைக் கொண்டு, திருப்தியடைவதற்கும் முடியாது. இது, கட்டுமானத்துறையின் தேவைகள் கருதிய ஏற்றுமதி, இறக்குமதி நிலைமைகளைப் பொறுத்த வளர்ச்சியாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 09.12.2017 அன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

2010 – 2015 வரையிலான காலகட்டத்தில் எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியானது 6.4 வீதத்தினை சராசரியாக எட்டியிருந்தது. அதற்குப் பிந்தியதான காலகட்டத்தில் – அதாவது 2017ஆம் அண்டின் முதற் காலாண்டு வரையில், எமது பொருளாதார வளர்ச்சியானது தொடர் வீழ்ச்சி நிலையையே கண்டுள்ளது.

இத்தகைய வீழ்;ச்சி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக, 2015ஆம் ஆண்டு முதல் மிகவும் அதிகளவில் எமது நாட்டைப் பாதித்து வருகின்ற வரட்சியும் ஒரு காரணமாகும். வடக்கு, கிழக்கு, வட மத்தி மற்றும் மத்திய மாகாணங்களை இந்த வறட்சி மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்திகள் வெகுவாகவே முடங்கிவிட்டன. அத்துடன், பணவீக்கமும் அதிகரித்திருந்தது.

கடந்த ஆண்;டு இரண்டாம் காலாண்டுப் பகுதியுடன் இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியை ஒப்பிடும்போது, விவசாய உற்பத்திகளின் வளர்ச்சி – குறிப்பாக, நெல், எண்ணெய் சார்ந்த பழங்கள், தேங்காய், தானியங்கள், காய்கறிகள், வாசனைத் திரவியங்கள் அடங்களான உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், கடந்த மூன்று வருடங்;களாக மறை வளர்ச்சி வீதங்களையே தொடர்ச்சியாகக் கொண்டிருந்த இறப்பர் மற்றும் தேயிலையின் வளர்ச்சியானது, முறையே 10.2 மற்றும் 6.9 சதவீதமான குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, விவசாயத்துறை உற்பத்தியின் வளர்ச்சியானது, 2017ஆம் ஆண்டில் இதுவரையில் 40 சத வீதமான வீழ்ச்சி நிலையைக் காட்டுகின்றது.எனவே, பிரதான உற்பத்தித்துறைகள் தொடர்பிலான அவதானங்களே அதிகமாகத் தேவைப்படுகின்றன. அதே நேரம் பிறநாட்டு முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு ஈர்ப்புத்தன்மை, அதற்குரிய வசதிகள் மற்றும் சலுகைகள், சட்ட சிரமங்கள், கொள்கைத் தளர்த்தல்கள் போன்றவை அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாட்டுக்கு ஏற்ற வகையில் வகுக்கப்பட வேண்டும்

அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்ற வகையில், நிதி உதவிகளை, சலுகைகளை, மானியங்களை வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்க்க முடியாது. எமக்கான பொருளாதாரத்தினை எமது உற்பத்திகளின் மூலமாகவே – அவற்றின் ஏற்றுமதிகளின் மூலமே நாம் ஈட்டிக் கொள்ள வேண்டும – என்றார்.

Related posts: