விளையாட்டு வீரர்கள் வடகிழக்கிலிருந்து ஏன் தெரிவு செய்யப்படுவதில்லை? – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 9th, 2017

எமது நாட்டின் கிரிக்கெற் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலிருந்து இதுவரையில் ஒரு வீரர்தானும் தேசிய மட்ட அணிக்கு தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

அதே நேரம், வடக்கு மாகாணத்திலிருந்தும் மிக நீண்ட காலமாக இதே குறைபாடு நிலவுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறந்த கிரிக்கெற் விளையாட்டு வீரர்கள் இல்லாமல் இல்லை.அவர்கள் இனங்காணப்பட்டு, ஊக்குவிக்கப்படாத நிலையும், கை கொடுத்து உதவாத நிலையுமே அங்கு நிலவுகின்றன. எனவே, இவ்விடயம் குறித்தும் உரிய அவதானங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும்,

யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை நாடளாவிய ரீதியில் ஏனைய சங்கங்களுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த ஏற்பாடுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதை தொடர்ந்து காணக் கூடியதாக இருக்கிறது.

கடந்த வருட தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் 8 வது இடத்தையும், வடக்கு மாகாணம் 9 வது இடத்தையுமே பெற்றிருக்கின்ற நிலையில்,வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மட்டங்களிலிருந்தே அதனை ஊக்குவிப்பதற்கும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அதி முக்கிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், கபடி உட்பட ஏனைய தேசிய ரீதியிலான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, கடற்கரை விளையாட்டுக்களை மேலும் வளர்த்தெடுக்கக் கூடிய செயற்திட்டங்களையும் அப் பகுதிகளில் வளர்த்தெடுக்கவும் முன்வர வேண்டியதுடன்,வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பிராந்திய விளையாட்டுக் கழகங்களை வலுமிக்கதாக மேம்படுத்தி, அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

அந்த வகையில், முன்னாள் யுத்த வலயங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை அதிக பட்சம் விளையாட்டுத் துறையுடன் இணைத்து, அவர்களை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: