வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, December 3rd, 2016

வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தி நிலையை எட்ட வேண்டும். இதற்கான திட்டங்களைக் கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நகர அபிவிருத்திச் சபையின் ஊடாக உலக வங்கியின் நிதி உதிவியுடன் வடக்கில் – யாழ்நகர அபிவிருத்திப் பணியை முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தப் பணியை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதில் கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் காட்டி வருகின்ற அக்கறைக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், பலத்த சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது சூழல் ரீதியில் பாரிய பாதிப்புகளை உண்டுபண்ணும் என்ற கருத்துப் பரவலாக முன்வைக்கப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்.

குறிப்பாக, இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அது களணி கங்கையில் வெள்ளப் பெருக்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் களணி கங்கை பெருக்கெடுத்து கொழும்பு புறநகரப் பகுதி மக்களில் பெருந் தொகையானோர் பாதிக்கப்பட்ட நிலையை நாம் அனைவரும் அறிவோம்.எனவே இது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் விளக்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைப் பயிற்சிக்கான பாதைகள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டு வந்தன. கொழும்பில் ஏற்கனவே அமைக்கப்படாதிருந்த இடங்களில் இந்தப் பாதை தற்போது அமைக்கப்பட்டு வந்தாலும் அது நத்தை வேகத்திலேயே நகர்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, பம்பலப்பிட்டி கடற்கரையோரத் திட்டத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். இத் திட்டமானது பல மாதங்களாக இன்னும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்றே நாட்டில் ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன.

அதே நேரம், நாட்டில் ஒரு அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படும்போது அதனை நிலைத்த அபிவிருத்தி என்ற வகையில், அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொண்டால், பிற பாதிப்புகளையும், வீண் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதனைக் கருதாமல் இந்த நடைப் பயிற்சி பாதைகள் உட்பட பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில வாரங்களிலேயே அவை வேறு அபிவிருத்தித் தேவைகளுக்காக தோண்டப்படுகின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும், மேற்படி நடைபாதை அமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும், இந்த நடைப்பயிற்சி பாதை வசதிகள் இல்லாத வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அடங்களான ஏனைய மாவட்டங்களிலும் இதனை அமைப்பதற்கும் கௌரவ அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன்.

அதே போன்று, வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தி நிலையை எட்ட வேண்டும். இதற்கான திட்டங்களைக் கௌரவ அமைச்சர் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன், அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டம் அபிவிருத்தி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.  ஆற்றலும், அக்கறையும் கொண்ட அமைச்சர் கௌரவ சம்பிக்க ரணவக்க அவர்கள் எனது கருத்துக்களையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்தார்.

1551226054b4

Related posts:


அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின...
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் - அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு அன...