வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை தனியார் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தாருங்கள் – மூளாய் தட்டிவான் உரிமையாளர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Monday, February 11th, 2019

1990 களில் தட்டிவான் சேவையை மேற்கொண்டிருந்த நிலையில் நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நீண்ட காலமாக தடைப்பட்டிருக்கும் மூளாய் – அச்சுவேலிக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை மீண்டும் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுத்த்தந்து தமது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகையை பெற்றுத்தாருங்கள் என மூளாய் தட்டிவான் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தiமை அலுவலகத்தில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த குறித்த பிரதிநிதிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தட்டிவான் உரிமையாளர்கள் –

1990 களின் முன்னர் நாம் தட்டிவான் சேவையை இந்த வழித்தடம் ஊடாக மேற்கொண்டிருந்தோம். ஆனால் நாட்டில் நடந்த யுத்தம் காரணமாக அது பின்னாளில் தடைப்பட்டு போனது.

அதன்பின்னர் தற்போது நாட்டின் நிலைமைகள் சுமுகமாக வந்துள்ளதால் எமது தொழில் துறையான போக்குவரத்து சேவையை மேற்கொள்ள நாம் துறைசார் தரப்பினரிடம் அனுமதி கோரியிருந்தோம். அதுமட்டுமல்லாது அன்றைய காலகட்டத்தில் நாம் மேற்கொண்ட தட்டிவான் சேவை தற்போது சாதகமாக அமையாது என்பதால் அதற்கான மாற்றாக தற்போது நாம் சிற்றூர்திகளை கொள்வனவு செய்திருந்த நிலையில் போக்குவரத்து சேவையை மேற்கொள்ள அனுமதி இன்னமும் கிடைக்காதிருக்கின்றது.

குறித்த வழித்தட போக்குவரத்து சேவையை மேற்கொள்ள எமக்கு அனுமதி கிடைக்காமையால் நாம் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எமது இந்த  நிலைப்பாடு தொடர்பில் பல தடவைகளை சேவையை மேற்கொள்ள அனுமதியை பெற்றுத்தருமாறு பலரிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அதற்கான தீர்வுகள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெறவில்லை. எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்  தற்போது  உங்களிடம் வந்துள்ளோம். அந்தவகையில் எமது வாழ்வாதாரத்திற்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தந்து எமது குடும்ப பொருளாதாரத்துக்கு வழிவகை செய்து தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த பிரதிநிதிகளின் கோரிக்கையை கருத்திற்கொண்ட செயலாளர் நாயகம் துறைசார் தரப்பினருடன் பேசி காலக்கிரமத்தில் அதற்கான தீர்வை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


Related posts:


மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
கடந்தகால படிப்பினைகளை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தை சுபீட்சமானதாக கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந...
தமிழர்களின் எழுச்சிக் குரலானது ஒன்று பட்டு ஒலிப்பதே ஆகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...