வலி.வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளை டக்ளஸ் தேவானந்தா பார்வை!

Sunday, June 12th, 2016

வலிகாமம் வடக்கின் வளலாய் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளைப் பார்வையிட்டார்.

குறித்த பகுதிகளுக்கு இன்றைய தினம் (12)  விஜயம் மேற்கொண்டு மக்களுக்கான தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

முன்பதாக வளலாய்க்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டதுடன் பயனாளிகளுடனும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் பலாலியில் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிக்கும் சென்று அங்கு இடம்பெற்றுவரும் வீடமைப்புத் திட்டத்தையும் பார்வையிட்டிருந்தார்.

இதனிடையே மீள்குடியேறும் மக்களின் அத்தியாவசியத் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

குறிப்பாக குடிநீர் மின்சாரம் மலசலகூடம் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பிலுள்ள இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், முக்கியமாக வளலாய் – தொண்டமானாறு பிரதான வீதியைப் புனரமைப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மக்களின் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் அன்பு, கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பகுதி  நிர்வாக செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

va2

va4

Related posts: