வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் – உண்மையை கண்டறியுமாறும் பொலிஸாரிடம் வலியுறுத்து!

Thursday, February 16th, 2023

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில்,

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 16.02.2023

Related posts: