வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, June 20th, 2019

வடக்கிலும், கிழக்கிலும் செயற்பாடுகள் குறைவாகவுள்ள அல்லது கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ள தொழில்துறைகள் தொடர்பாகவும், அவை முறையாக செயற்படுத்தப்படாமல் இருப்பதால், இவற்றால் நாட்டின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தொழில் வாய்ப்புகளை நம்பியிருந்த குடும்பங்களும், அவற்றோடு தொடர்புபட்ட வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும், அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் ஆனையிறவு உப்பளம், ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைகள், அச்சுவேலி தொழில்பேட்டை, வவுனியா தொழில்பேட்டை, போன்றவற்றோடு, காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் போன்றன.  குறைவான செயற்பாடுகளை அல்லது எதிர்பார்க்கப்படும் பயன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை காகித ஆலைத் தொழிற்சாலை உள்ளடங்களாக அனைத்துத் தொழில்துறைகளும், யுத்த காலத்தில் முடக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் பலரின் அரசியல் சுய லாபங்கள் காரணமாக மீள இயக்கப்படாமல் முடக்கப்பட்டுக் கிடக்கின்றது. அல்லது போதிய பயன்களைப் பெறாதவகையில் செயற்படுகின்றன. இதுபோல் கந்தளாய், கிங்குறான சீனித் தொழிற்சாலை, புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கின்றன.

இவ்வாறு வடக்கு கிழக்கில் அமைந்துள்ள பாரிய தொழிற்சாலைகளை மீள இயக்குதல் அல்லது கூடுதல் பயனைப் பெறுகின்றவாறு இயக்குதல், அந்தத் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் பங்கீடுகளில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான முன்னுரிமைகளை வழங்குதல் போன்ற விடயங்களில் அநாவசியமான புறக்கணிப்புகளும், மறுப்புகளுமே தற்போது இந்த தொழிற்சாலைகளின் பெயரால் நடந்தேறிவருகின்றது.

வடக்கு, கிழக்கில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், வெளிநாடுகளிலிருந்து தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் யுத்தம் ஒரு தடையாக கடந்த காலத்தில் இருந்துள்ளது. ஆனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், வடக்கு, கிழக்கில் காணப்பட்ட பாரம்பரிய தொழில்துறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் புனரமைத்து திருப்தியானவகையில் மீள இயக்குவதிலும், அங்குள்ள வளங்களை அடையாளங்கண்டு அவற்றுக்கேற்ற புதிய தொழில்துறைகளை ஏற்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும், அரசும் அக்கறை காண்பிக்கவில்லை என்பது ஏமாற்றமாகவே இருக்கின்றது.

இந்தக் குறைபாடு நீக்கப்பட்டிருந்தால், இன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் காணப்படும், வேலை இல்லாப் பிரச்சனைக்கும், வறுமைக்கும் தீர்வுகண்டு, யுத்தப்பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்த மக்கள் சுய பொருளாதாரத்தில் மீள் எழுச்சி பெற்று முகமுயர்த்தி வாழும் சூழலை ஏற்படுத்தியிருக்கலாம்.

Related posts:

பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் - புத்தாண்டு வாழ...
எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் - அம்ப...
மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...