வடக்கில் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார் அமைச்சர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Wednesday, November 17th, 2021

எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களாக கணிக்கப்பெற்று வருகின்றன.

அந்த நிலங்களில் எமது மக்கள் யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, அவ்வாறான இனங்காணப்படுகின்ற நிலங்களில் சூழல் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மண் வேளாண்மை மற்றும் நீர் வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுவதற்கான வசதிகளை துறைசார்ந்த அமைச்சர்கள் மேற்கொண்டு தர வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காடடியுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் மீளக் குடியேறாமல் இருந்து வருகின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கென ஆயிரத்து 259 மில்லியன் ரூபாவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் ஆயிரத்து 200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், யாழ் நகர சபைக் கட்டிட நிர்மாணிப்பிற்குமென மேற்படி அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீர்ப்பாசனத் துறையைப் பொறுத்த வரையில், கீழ் மல்வத்து ஓயாத் திட்டம், வட மத்தி பிரதான கால்வாய் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் எமது மக்களுக்கு பெரிதும் பயன்படத்தக்கவை.

எமது மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத் துறைக்கும், கால்நடை அபிவிருத்திக்கும், எமது நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பதற்கும் பெரிதும் நன்மை பயக்கின்ற அபிவிருத்திகளாக இவற்றை எமது பகுதிகளைப் பொறுத்து கருத முடிகின்றது.

அதேநேரம், இத்திட்டங்களின் கீழான குடியேற்றங்களில் அப்பகுதி சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது பகுதிகளில் உவர் நீர் உட்புகும் பகுதிகளில் அவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குடிநீர் வசதிகளைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்டதாக மழை நீர் சேகரிப்பு ஏற்பாடுகளுக்கான வசதிகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேலும் மேற்கொள்ளத்தக்க வகையில் நிதி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழிற்துறையை பொருத்தமட்டில், திருகோணமலை கைத்தொழிற்பேட்டை உள்ளடங்களான மேம்பாடுகள் மற்றும் ஏறாவூர் விசேட புடவை உற்பத்தி வலய உருவாக்கம் எமது பகுதிகளுக்கு முக்கியத்துவங்களாக அமைகின்றன. ஏறாவூர் புடவை உற்பத்தி வலயம் என்பது நீண்டகால எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், தற்போது செயற்பாட்டிலுள்ள வவுனியா மற்றும் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டைகளின் மேம்பாடு தொடர்பிலும், ஏற்கனவே செயற்பட்டு, தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, உப்பளங்கள், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை போன்ற ஏனைய கைத்தொழிற்துறை சார்ந்த தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும், பற்றிக் கைத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்பதனையும் இங்கு அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன்

000

Related posts: