வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019

வடக்கு மாகணாத்திலே கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ அமைச்சர் ஹரீன் பெர்னாந்து அவர்கள் அவதானங்களை எடுக்கின்றபோது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிகூடிய அவதானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;       

குறிப்பாக, தமிழ் – சிங்கள மக்களிடையே பரம்பரை பரம்பரையாக இருந்து வந்துள்ள பாரம்பரிய விளையாட்டுக்கள் பல இன்று அருகிவருகின்ற நிலையே காணப்படுகின்றது. சிங்கள பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான ‘அங்கம்பொற’ பற்றி தற்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல கலை. அதேபோல், தமிழர் வரலாற்றிலும் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இன்று அருகிவருகின்றன.

அதேபோன்று தேசிய கிரிக்கெற் அணிக்கு தெரிவாகக் கூடிய வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சார்ந்த வீரர்களும் உருவாக வேண்டும். அதற்கேற்ப வசதிவாய்ப்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

அதேநேரம், கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விளையாட்டு மைதானத்தின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கையினை மாவட்ட இளைஞர் கழகங்கள் முன்வைத்துள்ளன.

இந்த மைதானப் பணிகள் கடந்த 7 வருடங்காக இழுத்தடிக்கப்பட்டு, கட்டம் கட்டமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மைதானத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து ஒரு தொகை வேறொரு மாவட்டத்திற்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மாற்றப்பட்டதாகவும், இதனாலேயே இந்த மைதானப் பணிகள் தாமதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மைதானமானது எனது கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2012ஆம் திகதி அடிக்கல் நட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும். அந்த வகையில், நீண்ட காலம் கடந்தாவது இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தமை தொடர்பில் எமது மக்கள் சார்பாக எமது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Related posts:

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்ட...
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...
வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட ச...

மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் - நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்க...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!
யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்த...