வடகடல் நிறுவன செயற்பாடுகள் அதிருப்தி தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, November 29th, 2018
வடகடல் நிறுவனத்தின் கடந்தகால செயற்பாடுகளில் முறைகேடுகளும், நிர்வாக வினைத்திறன் இன்மையும் மலிந்து காணப்படுவதாக நிறுவனப் பணியாளர்கள், பயனாளிகள் முதற்கொண்டு பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாலை அமைச்சில் இடம்பெற்ற வடகடல் நிறுவன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது, வடகடல் நிறுவனத்தின் கடந்த சில வருட கால செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்திய அமைச்சர் அவர்கள், கடந்த கால தவறுகள் இனியும் இடம்பெறாதவகையில் அவற்றைத் திருத்திக்கொண்டு, முறையாகவும், வினைத்திறனுடனும் செயற்படக்கூடிய வகையில் மாற்றுத் திட்டமிட்டு, அது தொடர்பில் உரிய அறிக்கை தயாரித்து, தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட காலத்திலும், அதற்கு முன்னரும் மேற்படி நிறுவனம் வினைத்திறனுடன் செயற்படுத்தப்பட்டு. தரமான உற்பத்திகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன.
ஆனால், தற்போது மேற்படி நிறவனத்தின் உற்பத்திகள் தரம் குன்றியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ள்ள நிலையில், தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள மூலப்பொருட்களை இடைநிறுத்தி, தரமான மூலப் பொருட்களை இறக்குமதி செய்து தரமான உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் அமைச்சர் அவர்கள் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
|
|
|


