லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017

2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது.

ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றப்பாடு மக்கள் மத்தியில் காட்டப்படுகின்ற போதிலும்,

உண்மையிலேயே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

மேற்படி ஆய்வினைப் பொறுத்த வரையில் அதிகளவில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றவர்கள் பட்டியலில் முதலாமிடத்தில் அரசியல்த்துறை சார்ந்தவர்களும்,

இரண்டாமிடத்தில் பொலிஸாரும், மூன்றாவதாக நீதித்துறை சார்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கல்வித்துறையே இலஞ்சம் அதிகரித்துள்ள துறையாக இருப்பதாக ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு தகவல் குறிப்பிடுகின்றது.

எனவே. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடத்திட்டமொன்றை பாடசாலை பாட நூல்களில் உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்கின்ற வகையிலேயே தற்போதைய சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டிலே நடைமுறையில் இருக்கின்றன.

இது, இலஞ்சம் மற்றும் ஊழலை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு போதுமான சட்ட ஏற்பாடாக இல்லை என்றே தெரிய வருகின்றது.

ஏனெனில், எமது நாட்டில் சுமார் 3000க்கும் அதிகமானோர் திடீர் செல்வந்தர்களாகியுள்ளனர் என்ற தகவலையும் இதே இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவே தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மாத்திரமன்றி, சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்து,

அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்கள் மேற்படி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் கல்வித்துறை சார்ந்தே அதிகளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதாக மேற்படி ஆணைக்குழு தெரிவிக்கும் நிலையில்,

பெற்றோர்களிடமிருந்து நன்கொடைகளைக் கோருகின்ற பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சுக்குத் தெரியாது எனக் கூறுவதற்கு இடமில்லை. பல பாடசாலைகளில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளது என கல்வி அமைச்சர்கள் அடிக்கடிக் கூறுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

இத்தகைய நிலையில், கல்வி அமைச்சு மேற்படி பாடசாலைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை மேற்கொள்ளாததும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் ஏன் என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுவது நியாயமாகும்.

Related posts:

"மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம்" - தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வ ...
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...
நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவ...