ஏற்றுமதிப் பொருட்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, September 4th, 2018

ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் சற்று வளர்ச்சி நிலையினை எட்டியுள்ளதாகவே அறிய முடிகின்றது. எனினும், இறக்குமதியானது ஏற்றுமதியைவிட மிகவும் அதிகரிப்பினையே காட்டி, தொடர்கின்றது.

தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் 6.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையே காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. எமது நாட்டு தேயிலை உற்பத்தி தொடர்பில் நான் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றேன். இந்த அரசு தனது முழுமையான அவதானத்தைச் செலுத்தி தேயிலை உற்பத்தி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தாவிட்டால், அது இந்த நாட்டின் பொரளாதாரத்திற்கு பலத்த அடியாக விழக்கூடும். தைத்த ஆடைகளும், புடவைகளுமே எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு கைக்கொடுக்கும் என்ற அசட்டையில் இருந்துவிட்டால், ஏனைய ஏற்றுமதி உற்பத்திகள் யாவும் மறைந்து போய்விடக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன.

கடந்த மாதம் மிளகு செய்கையாளர்கள் ஒரு போராட்டத்தினை நடத்தியிருந்தனர். இலங்கை மிளகுக்கு சர்வதேச சந்தையில் நல்லவிதமான கேள்வி இருக்கின்ற நிலையில், தரமற்ற வெளிநாட்டு மிளகினை கொண்;டு வந்து, இலங்கை மிளகுடன் கலப்படம் செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் இலங்கையின் ஏற்றுமதி மிளகின் தரம் குன்றிவிட்டதாகவும், இதனால் இலங்கை மிளகின் – அதாவது கலப்படம் செய்யப்பட்ட மிளகின் விலை வீழ்ச்சி காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மிளகு செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற காலத்தின்போது, தேர்தல் பிரச்சாரத்திற்கென மலையகப் பகுதிக்குச் சென்றிருந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் இந்த மிளகு கலப்படம் தொடர்பில் கதைத்திருந்தது நினைவுக்கு வருகின்றது. இந்த கலப்பட விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். எனினும், இன்று வரையில் இந்த அரசு அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் எடுத்ததாகத் தெரிய வரவில்லை.

இதே நிலைமையே இலங்கைத் தேயிலைக்கும் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறகின்றன. இந்த வகையில், தரம் மிகுந்த எமது நாட்டு உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தைகளில் அவப் பெயரினை எற்படுத்தி, எமக்கான ஏற்றுமதி பொருட்களுக்கான வாய்ப்புகளை நாம் இழந்து வருகின்றோம் என்பதனை மீண்டும் இங்கு பதிவு செய்து வைப்பதுடன், இத்தகைய கலப்பட செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய அழிவினையே சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதையும் கூறிவைக்கின்றேன்.

அதே நேரம், கடந்த வாரம் ஊவ பரணகம பகுதி உருளைக்கிழங்கு உற்பத்தியார்களும் ஒரு போராட்டத்தினை நடத்தியிருந்தனர். அதாவது தங்களது உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடைக்காலத்தில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதி காரணமாக சந்தையில் தங்களது உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதே இவர்களது இப் போராட்டத்திற்கு காரணமாகும்.

இத்தகைய போராட்டங்கள் இந்த நாட்டில், உருளைக்கிழங்கு, வெங்காயம், மரக்கறிகள் போன்ற பயிர்ச் செய்கைகளின் அறுவடைக் காலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், இதுவரையில் இதற்கு ஒழுங்கு முறையிலான தீர்வுகள் இந்த நாட்டில் இல்லாதிருக்கின்றன.

எனவே, இவை தொடர்பில் அக்கறையுடனான அவதானங்களை செலுத்தி, இத் துறைகள் சார்ந்து தேசிய கொள்கை ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் தொடர்பான விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்!
மத்தியில் பங்குதாரர் ஆனாலும் மாநிலத்தில் சுயமாகவே முடிவெடுப்பேன் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...