யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 21st, 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினது மரணச் செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கும் அதேவேளை இருவரின் மரணம் தொடர்பிலான நீதியானதும் நேர்மையானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவது அவசியமானதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது என்ன நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை மாறி போர் முடிவுககு கொண்டுவரப்பட்டு அமைதிச்சூழல் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு அனர்த்தம் இடம்பெற்றுள்ளமையானது எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துள்ளது.

கடந்தகாலங்களில் பொதுமக்கள்; மட்டுமன்றி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் காணாமல் போகச்செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவங்களால் உயிரிழக்க நேர்ந்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

போர் முடிவுக்கு வந்து அமைதிச் சூழல் திரும்பியுள்ள நிலையில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் இச்சூழலில் இப்பேற்பட்ட சம்பவம் நிகழ்நதுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலையையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

அந்த வகையில் மாணவர்கள் இருவரின் மரணம் என்பது தொடர்பில் நாம் எமது கண்டனங்களை தெரிவிக்கும் அதேவேளை குறித்த மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

இந்நிலையில் நாட்டில் தறபோது முன்னெடுக்கப்படடுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு நாம் எமது பூரண ஆதரவினை வழங்கிவரும் நிலையில் மாணவர்களின் மரணமானது இன்றுள்ள அமைதிச்சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த மரணம் தொடர்பில் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் அமைதிகாத்து முன்னெடுக்கப்படும் நீதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இதனிடையே மாணவர்களின் இழப்பின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கும் அதே வேளை பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமது கட்சி சார்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்படடுள்ளது.

Untitled-1 copy

Related posts: