யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டும்.

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஞானரத்தின தேரோவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தனது சமயக்கடமையை முன்னெடுத்தவர் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் முன்னெடுத்த முயற்சிகளில் தனது பங்களிப்பைச் செய்தவர் என்பதையும் எண்ணிப்பார்க்கின்றோம்.
அதேவேளை அன்னாரின் இறுதிக் கிரியைககள் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் முற்றவெளிப்பிரதேசமானது அதற்கு பொருத்தமற்றதாகும். அது எமது மக்களின் மனதை புன்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன், தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவும் பொருத்தமான முடிவுகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று விடுத்துள்ள ஊடகங்களுக்கான அந்த அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது, நீண்டகாலம் யாழ்ப்பாண மண்ணில் தங்கியிருந்து பணியாற்றிய நாகவிகாரை விகாரதிபதியின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் வேறொரு பொருத்தமான இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் முற்றவெளிப்பகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானதாக இருந்தாலும், வரலாற்றில் எக்காலப்பகுதியிலும் அவ்விடத்தில் இறுதிக்கிரியைகளோ, உடல் தகனங்களோ நடைபெறவில்லை. அது தவிரவும் அப்பிரதேசத்தில் யாழ்ப்பாண மக்கள் வழிபடும் முனியப்பர் கோயில் அமைந்துள்ளது. எனவே அந்த இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறுவதும், உடல் தகனம் நடைபெறுவதும் பொருத்தமானதல்ல.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மனங்களைப் புண்படுத்தும் விதமாக முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உடல் தகனம் செய்யப்படுமானால், அத்தகைய செயற்பாடு தேசிய நல்லிணக்கத்தை பெரிதும் பாதிப்பதாகவே அமையும்.
எனவே விகாராதிபதியில் இறுதிக்கிரியையானது தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காதவகையில் பொருத்தமான வேறொரு இடத்தில் கௌரவமாக நடைபெறுவதை உறுதி செய்யும்வகையிலும்  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts: