‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
Friday, July 26th, 2019
‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று இந்த விவாதத்தைக் கொண்டு வந்துள்ள தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்கின்றன. அதில் ஒரு அங்கமாகவே – அநேகமாகக் கடைசி அங்கமாகவே – இன்றைய இந்த விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இது வெறும் விவாதமாக இருக்குமே தவிர இதனால் ஆகப் போகின்ற பயன் எதுவும் கிடையாது என்பது இந்த விவாதத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவர்களுக்கு வாக்களித்த எமது மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கும், அடுத்த தேர்தலின்போது வெறுங் கையுடன் வீடு வீடாகப் போனால் எதுவும் நடக்காது என்பதால், இந்த விவாதத்தையாவது எடுத்துக் கொண்டு போவோம் என நினைத்திருப்பதாலும், இந்த இரண்டு நாட்கள் அவர்களது கடைசி நேரப் பிழைப்பாகவே இருக்கின்றது.
என்றாலும், எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. எமது மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தத் தரப்பினர் அடிக்கடி மறந்துவிடுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.
‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?” என்றொரு பழமொழி இருக்கின்றது. இந்தப் பழமொழி இவர்களது செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
Related posts:
|
|
|


