மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, August 19th, 2021

மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அன்னாரது மறைவு குறித்து விடுத்துள்ள தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பாளராக, வானொலி நாடகங்கள் பலவற்றினை உருவாக்கி, தமிழ் பேசும் சமூகத்தில் கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அமரர் ஜோர்கிம் பெர்னான்டோ மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நான் நன்கு அறிவேன். அந்த முயற்சியில் அவர் கணிசமான  வெற்றியையும் பெற்றிருந்தார்.

எமது மக்களுக்கான கௌரமான எதிர்காலத்தினை உருவாக்கும் மாற்றுத் திட்டத்துடன் 90 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் நான் நாட்டுக்கு திரும்பியிருந்தேன்.

அக்காலப் பகுதியில், எமது மாற்றுத் திட்டத்தில் காணப்பட்ட யாதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு, அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அமரர் ஜோர்க்கிம் பெர்னான்டோ வழங்கிய ஒத்துழைப்புக்களை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ‘மக்கள் குரல்’ மற்றும் ‘இதயவீணை’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஊடாக மக்களுக்கு உண்மைகளை கொண்டு சென்றதிலும், அந்த நிகழ்ச்சிகளை மக்களின் அபிமானம்மிக்கவையாக உருவாக்குவதிலும், ஓர் ஒலிபரப்பாளனுக்கு இருக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன்  தனது பங்களிப்பினை அன்னார் வழங்கியிருந்தார்.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: