முல்லை கடற்பரப்பில்  வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை :  அமைச்சர் மகிந்த அமரவீர டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதி.

Wednesday, April 13th, 2016

முல்லைதீவு கடற் பரப்பில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவும் வகையில் அப்பகுதியில் வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர  அதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அண்மையில் ஈ.பி.டி.பி. கட்சியினருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் செயலாளர் நாயகம் அவர்கள் மேற்படி கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்தார்.

முல்லைதீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை தடுக்க அமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டிய செயலாளர் நாயகம் அவர்கள், இதனை முற்றாக ஒழித்து எமது மக்கள் தங்களது தொழிலில் நிம்மதியாக ஈடுபடவும், அதன் ஊடாக தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கூடிய விரைவில் அதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: