மலையாளபுரத்தில் புதிய சமுர்த்தி வங்கி – அமைச்சர் டக்ளஸ் உடனடி நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் மலையாளபுரம் பகுதியில் புதிய சமுர்த்தி வங்கி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று மக்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
பரந்த நிலப்பரப்பையும், அதிகளவு கிராமசேவையாளர் பிரிவுகள் மற்றும் சனத்தொகையையும் கொண்ட கரைச்சிப் பிரதேச செயலக பிரிவுக்குள் இதுவரை இருந்துவரும் 3 சமுர்த்தி வங்கிகளுக்கு மேலதிகமாக ஒரு வங்கி உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் மக்கள் சார்பாக அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்தார்.
இதனை உடனடியாகப் பரிசீலனைக்கு எடுத்த கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, சமுர்த்தி அமைச்சருடன் கதைத்து இதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்துதருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை உடனடியாகக் கவனத்தில் எடுத்த சமுர்த்தி அமைச்சு மலையாளபுரத்தில் புதிய சமுர்த்தி வங்கியை உருவாக்குவதற்கான அனுமதியை நேற்று (24-11-2021) கடித மூலம் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளது.
இந்த புதிய வங்கியை உருவாக்குவதற்கான செலவுகளுக்கென 7 இலட்சம் ரூபா நிதியினையும் சமுர்த்தி அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.
கரைச்சி பிரதேச செயலக பிரிவின்கீழ் கனகாம்பிகைக்குளம், அம்பாள்நகர், பொன்னகர், மலையாளபுரம், விவேகானந்தநகர், செல்வாநகர், கிருஷ்ணபுரம், தொண்டமான்நகர், அம்பாள்குளம், பாரதிபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி மலையாளபுரத்தில் இந்தப் புதிய சமுர்த்தி வங்கி அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சனிக்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணியாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்தியபோது, மக்களுடைய சிரமங்களைக் குறைக்கும் வகையில் மலையாளபுரத்துக்கான புதிய சமுர்த்தி வங்கியை விரைவில் அமைத்துத் தருமாறு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டம் நடைபெற்று 3 தினங்களுக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் துரித நடவடிக்கையால் மலையாளபுரத்தில் புதிய சமுர்த்தி வங்கிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|