மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017

நாட்டில் மருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற விலைக் குறைப்புகள் தொடர்பில் நாம் மேலும் அவதானங்களைச் செலுத்த வேண்டும் என என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழான கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது நாட்டில் மருந்து வகைகளின் விலைகள் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றிய  நிலையில் மிகவும் அதிகரித்திருந்த ஒரு காலகட்டத்தில், எமது சுகாதார அமைச்சர் கௌரவ, மருத்துவக் கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள் 48 மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு எடுத்திருந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இருப்பினும், அது தொடர்பில் பொதுவாக எமது மக்களிடையே காணப்படுகின்ற கருத்துக்களையொட்டி சில விடயங்களை இந்தச் சபையிலே முன்வைக்க விரும்புகின்றேன்.

தற்போது எமது நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற சுமார் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான ஒரு பட்டியல் இருக்கிறது. இந்த மருந்து வகைகள் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது இந்த மருந்து வகைகளுக்கான வர்த்தகப் பெயர்கள் சுமார் 2000 வரையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறான வர்த்தகப் பெயர்களிலிருந்து 48 மருந்து வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவே நான் அறிகின்றேன்.

அந்த வகையில், தற்போது சந்தையில் விற்பனையாகின்ற மருந்து வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் விலைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, அவ் விலையின் நடுத்தர பெறுமதி அவதானத்தில் கொள்ளப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட சில்லறை விலை வகுக்கப்பட்டுள்ளது என்றே தெரிய வருகிறது.

மருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற விலைக் குறைப்புகள் தொடர்பில் நாம் மேலும் அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளதை இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஏனெனில், அதி கூடிய விலைகளைக் கொண்டிருந்த ஒரு சில மருந்து வகைகளின் விலைகள் மாத்திரம் குறைந்துள்ள நிலையில், சாதாரண பொது மக்கள் பயன்படுத்துகின்ற பெரும்பாலான வர்த்தகப் பெயர்களைக் கொண்ட மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படாத ஒரு நிலை காணப்படுவதாக பலரும் விமர்சிக்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே நேரம், சர்வதேச சந்தை விலைப் பெறுமதிகளுக்கேற்ற வகையிலன்றி, உற்பத்தி விலையினை அடிப்படையாகக் கொண்ட விலைப் பொறிமுறையினை அடிப்படையாகக் கொண்ட விலைக் குறைப்புகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுவது உசிதமாகும் என்றே கருதுகின்றேன்.

அத்துடன், மருந்து வகைகளின் தரத்துக்கும், அவற்றின் விலைகளுக்குமான தொடர்புகளின்மை குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரச ஒளடதக் கூட்டுத்தாபனத்துக்குரிய நிறுவனம் தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகளின் தரம் உயர்வானதாகவும், அவற்றின் விலைகள் குறைவாகவும் காணப்படுகின்ற நிலையில், ஒரு சில விலை கூடிய மருந்து வகைகள் தரத்தில் உயர்ந்தனவாக இல்லை என்றும் தெரிய வருகிறது. இவை தொடர்பிலான புரிந்துணர்வுகள் பொது மக்கள் மத்தியில் பரவலாக இல்லாததால், அது குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான வலுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகிறது.

மருந்து வகைகளின் விலைக் கட்டுப்பாட்டினைப் பேணுவதற்கும், அவற்றின் இறக்குமதிக்கும், தயாரிப்பிற்குமான பொறுப்பினை அரசு ஏற்க வேண்டும் என்ற சேனக பிபிலேயின் திட்டத்திற்கு அமைவாக அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனமானது 1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என நம்புகின்றேன்.

தற்போதைய நிலையில் எமது நாட்டுக்கு 95 சத வீதமான மருந்து வகைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதே~; போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இவற்றின் தரம் பற்றி பல கேள்விகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் சுமார் 22 நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருவதாகவும், இவற்றின் ஊடாக எமக்குத் தேவையான அத்தியாவசிய  மருந்து வகைகளில் 10 வகையினை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அறியக் கிடைத்துள்ளது.

இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சியாகும.; எனவே, இவ்வாறான முயற்சிகளை ஊக்குவித்து, வளர்ப்பதற்கும், மேலும் இவ்வாறான முயற்சிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சேனக பிபிலே கொள்கையினை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஒளடத கொள்கை வகுக்கப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பின்பற்றப்படுகின்ற கொள்கைகள் பெரும்பாலனானவை சேனக பிபிலே ஒளடத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான கொள்கைகள் செயற்படுகின்றபோது அவற்றுள் சில அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்படுகின்றன. குறிப்பாக, விலைக் கட்டுப்பாடு, மருந்து வகைகளின் தரம் போன்ற விடயங்கள் இரசாயண கூடங்களின் ஊடாக பல நாடுகளில் நெறியாள்கை செய்யப்படுகின்றன. இவ்வாறு நெறியாள்கை செய்யப்படுகின்ற மருந்து வகைகளுக்கு தரச் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயமும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இங்கு குறிப்பிடத்தக்க இன்னுமொரு விடயம், மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடுகள் நிகழா வகையில் அவற்றின் இருப்பினைப் பேணுவதாகும். மருந்து வகைகளின் தட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மருந்து உற்பத்தி நிறுவன முகவர்கள் தங்களது உற்பத்தி தொடர்பிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வகையில் மருத்துவர்களை நாடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன என்றும் தெரிய வருவதால், அரச மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு எப்போதும் இல்லாதிருத்தல் அவசியமாகிறது.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், பொதுவான சூழல் உஸ்ண நிலையானது சுமார் 30 சென்டிகிரேட் அளவினைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில், அனைத்து மருந்து வகைகளும் 25 முதல் 30க்குக் குறைவான சென்டிகிரேட் உஸ்ண விகிதத்தில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைத்திருக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறின்றேல், அந்த மருந்து வகைகளின் செயற்பாட்டு வீரியம் படிப்படியாக பலஹீனப்பட்டு போகக்கூடிய அல்லது, பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை உருவாக்கக்கூடிய நிலை உருவாக இயலும் என்று தெரிய வருகின்றது.

இந்த நிலையில் மருந்து வகைகளை கொண்டு செல்கின்ற வாகனங்களைப் பொறுத்த வரையில், பகல் வேளைகளில் அவை செலுத்தப்படுகின்ற நிலையிலும், நிறுத்தி வைக்கப்படுகின்ற நிலையிலும், அனைத்து வகையிலும் மூடப்பட்ட நிலையில் அவற்றின் உஸ்ண நிலை சுமார் 80 அல்லது 90 சென்டிகிரேட் வரையில் உயர்வடையக்கூடும் என்றே தெரிய வருகிறது.

எனவே, இந்த வாகனங்கள் அதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதிகளைக் கொண்டனவா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் பொறுப்பு தேசிய ஒளடத கட்டளைகள் அதிகார சபையைச் சார்ந்துள்ளது. இந்த அனுமதிப் பத்திரமற்ற வாகனங்கள், குளிரூட்டல் வசதிகளைக் கொண்டிருந்தாலும், அவை மருந்துகளைக் கொண்டு செல்வதற்கு தகுதியற்ற வாகனங்களாகவே கருதப்படும்.

இந்த நிலையில், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கான மருந்து வகைகள் கொழும்பில் அமைந்துள்ள மருத்துவ வழங்கல் பிரிவிலிருந்து, மேற்படி வழங்கல் பிரிவிற்கான லொறிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லொறிகள் அனைத்தும் குளிரூட்டல் வசதிகளைக் கொண்டனவா? என்ற கேள்வியை நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

குறிப்பாக, இந்த வாகனங்கள்  காலை வேளைகளில் மேற்படி வழங்கல் பிரிவுக்குள் நுழைந்து, மருந்து வகைகளுக்கான வழங்கலைப் பெற்று, அதன் பின்னர் அவற்றை ஏற்றி, அதன் பின்னர் பட்டப் பகலில் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில், மாலை நேரமாகின்ற சந்தரப்பங்களில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்து சேரும்போது மறுநாள் பகல் வேளை தாண்டிவிடுகிறது. குறிப்பாக 24 மணி நேரங்களும் கடந்து விடுகின்றன.

இந்த வாகனங்கள் அரச ஒளடத நிறுவனத்தின் வாகனங்கள் என்பதால் இந்த வாகனங்களுக்கு தேசிய ஒளடத கட்டளைகள் அதிகார சபையின் அனுமதிப் பத்திரம் தேவையற்றது எனக் கூறப்படும் நிலையில், இந்த வாகனங்களை உணவு மற்றும் ஒளடத பரிசோதகர்கள் நிறுத்திப் பரிசோதிப்பதற்கோ, மடக்கிப் பிடிப்பதற்கோ முன்வருவதில்லை.

இந்த நிலையில் இவ்வாறான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்ற மருந்து வகைகளின் தரப் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதில் பாரிய கேள்விகள் எழுகின்றன. எனவே, இது குறித்து உடனடியானதும், நிலையானதுமான ஒரு ஒழுங்கமைப்பு கட்டாயம் தேவை என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

மருந்தகங்கள் ஊடான வர்த்தக நடவடிக்கையானது பொதுவாகவே சிறிய மற்றும் பாரிய பரிமாணத்தினாலான வர்த்தகத் துறையாக மாற்றம் பெற்றுள்ள நிலையில், இது பெரும்பாலான மக்களது ஜீவனோபாயங்களை ஈட்டிக் கொடுக்கின்ற ஒரு துறையாகவுள்ளது.

இவர்களில் மருந்தகர்கள் என்கின்ற பிரிவினர் முக்கியப் பங்கினை வகிக்கின்றனர். அந்த வகையில், எமது நாட்டைப் பொறுத்தவரையில் மேற்படி மருந்தகர்களுக்கான பற்றாக்குறை இல்லை என்றே கூறப்படுகின்றது.

அதாவது, வெளிவாரி பரீட்சைகளின் ஊடாக மருந்தகர்களுக்கான தகுதிகளைப் பெறுகின்ற பலர் தொழில் ரீதியாக மருந்தகர்கள் ஆகாத ஒரு நிலை காணப்படுகின்றது எனவும், இந்த பரீட்சையில் தோற்றி, சித்தியடைகின்ற பலர் வேறு தொழிற் துறைகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களாக இருப்பதாகவும்.

இவர்கள் பரீட்சைகளில் தோற்றி பெற்றுக் கொள்கின்ற சான்றிதழ்கள் பல மருந்தகங்களுக்கு விற்கப்படுவதாகவும், மருந்தகர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கு வசதியற்ற சிறு மருந்தகங்கள் இவர்களிடமிருந்து சிறு தொகைகளுக்கு சான்றிதழ்களைப் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்ற நிலையில், இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-1 copy

Related posts:

யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்ச...
அன்பும் அறமும் எங்கும் நிலவட்டும்! புதிய யுகம் நோக்கி புத்தாண்டு மலரட்டும்!! - வாழ்த்துச் செய்தியில்...
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கப்பிட்டல் தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜ...
திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்...