மனிதத்தை நேசித்த மகேஸ்வரி வேலாயுதம்  அவர்களின் நினைவு தினம் இன்று

Friday, May 13th, 2016

நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டபோது எனது பக்கபலத்துடன் அவர்களுக்காக இலவசமாகவே வாதாடி அவர்களை விடுதலை செய்து எமது கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து அவர்களை உறவினர்கள், பெற்றோர்களிடம் ஒப்படைக்கும்வரை தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களை புலிகள் சுட்டுப்படுகொலை செய்தநாள் இன்றாகும்.

சட்டத்தரணியாகவும்,மனிதநேயம் மிக்கவராகவும் அவர் ஆற்றிய சமூகசேவைகளும், அவர் ஸ்தாபித்து வெற்றிகரமாக செயற்படுத்திய மனித கௌரவத்துக்கான மன்றச்செயற்பாடுகளும் மறக்கமுடியாதவையாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நினைவு கூர்ந்துள்ளார்.

அன்னார் படுகொலைசெய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

நான் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது, எனக்கு ஆலோசகராக இருந்து நாடுதழுவிய ரீதியில் அவர் செய்தசமூகத் தொண்டுகளும், நலிந்த மக்களுக்கான உதவிகளும் இன்றளவும் பயன்மிக்கதும், பாராட்டுக்குறியவையாகும். மனிதநேயப் பணிகளிலும்,மாற்று வலுவுடையோருக்கான தேவைகளைநிறைவேற்றிக் கொடுப்பதிலும், சமயவிடயங்களிலும் அக்கறையுள்ளவராகவும், ஆற்றல் உள்ளவராகவும் இருந்தமகேஸ்வரி வேலாயுதம் அவர்கள்,அப்பாவித் தமிழ் இளைஞர்களை மட்டுமல்லாது, புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்து உதவியிருக்கின்றார்.

செம்மணி படுகொலைகள் விவகாரத்தையும், மிருசுவில் படுகொலைகளையும், கிரிசாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள் ஆகியோரின் கொலைகளையும், அவர்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளையும் உலகறியச் செய்வதிலும், அதற்குநீதிகேட்டு போராடியதிலும் ஈ.பி.டி.பி முன்னெடுத்த முயற்சிகளுக்கு சார்பாக மகேஸ்வரி வேலாயுதத்தின் துணிச்சலான செயற்பாட்டை குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

இதேபோல், மாற்றுவலுவுடையோருக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐக்கியநாடுகள் சாசனத்தில், இலங்கையின் சார்பில், சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் என்றவகையில் நான் கையொப்பம் இட்டுதாய் நாட்டுக்கு கௌரவம் சேர்த்த அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதோடு, அனைத்துப் பணிகளையும் முன்னின்று செய்துமுடித்த மகேஸ்வரி வேலாயுதத்தின் பங்களிப்புக்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

களுத்துறைசிறையில் அடைக்கப்பட்டிருந்ததமிழ்க் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கும், அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கும் நான் களுத்துறைசிறைக்குச் சென்றபோது, என்னோடு கூடவேவருகைதந்ததையும், சிறைக்குள் இருந்தபுலிகள் என்னை கொலை வெறியோடுதாக்கியபோது, அதைத் தடுப்பதற்காகவும், என்னைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் தவித்த தவிப்பைகாலத்தால் மறக்கமுடியாது.

புலிகளும் இலகுவாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக இருந்த மகேஸ் வரிவேலாயுதம் அவர்கள், தனதுதாயார்; நோயுற்று இருந்தபோது அவரைப் பார்ப்பதற்காக கரவெட்டியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். எனக்கு ஆலோசனையாளராக இருந்ததற்காக, மகேஸ்வரி வேலாயுதம் அவர்களைப் புலிகள் 13.05.2008ஆம் திகதி சுட்டுக் கொலை செய்தார்கள்.

அவரது இழப்பானது, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கும், சமூகத்தில் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கும் சமூகத்தில் நலிவடைந்து தேவைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் ஈடற்ற பேரிழப்பாகும்.

மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் ,மனிதநேயம்மிக்கவரை, விடாமுயற்சியாளரை, சமூக அக்கறையாளரை, நல்லஆலோசகரை இழந்துவிட்ட இடைவெளியையே மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பு எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: